>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 26 ஏப்ரல், 2017


ஆசிரியர்களுக்கான தேர்வுக் காலம் - தினத்தந்தி ஆங்கில நாளிதழ் ( DT NEXT)

செவ்வாய், 25 ஏப்ரல், 2017


இன்று லீவ், வார விடுப்பு கிடையாது : பஸ் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: 'விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், பஸ் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு, அரசு போக்குவரத்து சங்கங்களும், ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், 'போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார்.

இதையடுத்து, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், அரசு நேற்று அனுப்பிய 
சுற்றறிக்கை: பொதுமக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபடும் வகையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும், இன்று கண்டிப்பாக பணிக்கு ஆஜராக வேண்டும். 'பந்த்'தில், தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு, வார விடுப்பு, பணி ஓய்வு போன்றவை உடனே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழகத்தில், தினக்கூலி, சேமநல பணியாளர்கள், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலம் பஸ்களை இயக்க, அரசு முயற்சிக்கிறது' என்றனர்.a

அன்பாசிரியர் 36: அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த ஆசிரியை!

கடைசி வரை கற்றுக்கொண்டே இருப்பவர் - ஆசிரியர்




'மாணவர்களுக்காக என் நகைகளை அடகு வைத்து, ரூ.1.75 லட்சம் செலவில் வகுப்பறையை மேம்படுத்தியது பெரிதில்லை. அவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கற்பித்து தன்னம்பிக்கை மிக்க மாணவர்களாய் மாற்றுவதையே பெருமையாய் நினைக்கிறேன்' என்கிறார் இந்த அத்தியாய அன்பாசிரியர் அன்னபூர்ணா.


''விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் முதல் பணி கிடைத்தது. அங்கே ஒழுங்காய்த் தலை வாராமல், மூக்கொழுக, அழுது கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பணியை விட்டுவிடலாம் என்று நினைத்து, பகுதி நேரத்தில் பிசிஏ மற்றும் எம்பிஏ முடித்தேன். அந்த 5 வருடங்களில் மாணவர்கள் என்னை நெருங்கி வந்தாலும், நான் ஒதுங்கிப் போனேன். மெல்ல மெல்ல எனக்கும் அவர்களைப் பிடிக்க ஆரம்பித்தது.

ஆசிரியராகவே தொடர முடிவு செய்து, முதுகலை ஆங்கிலம் முடித்தேன். மாணவர்களுக்கு ஏபிசிடியை மட்டுமே சொல்லிக் கொடுப்பது ஒரு கட்டத்தில் போரடித்தது. நான் படித்த ஆங்கிலமும் மறக்க ஆரம்பித்தது. அதனால் பள்ளியில் ஆங்கிலத்தில் உரையாட முடிவு செய்தேன். காலை முதல் மாலை வரை மாணவர்களுடன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினேன்.

ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள், சிறிது நாட்களில் தடுமாறியவாறு பேசத் தொடங்கினர். நாட்கள் செல்லச்செல்ல தன்னம்பிக்கையுடன் சரியான உச்சரிப்போடு பேச ஆரம்பித்தனர். ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதால் அனைத்துப் பாடங்களையும் அவர்கள் எளிதில் புரிந்துகொண்டனர்.

உச்சரிப்பு முறை கற்பித்தல்

அரசு அளித்த ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை முறையாகப் பயன்படுத்திக் கொண்டேன். உச்சரிப்பு முறையிலேயே (Phonetics) அனைத்துப் பாடங்களையும் கற்பித்தேன். எங்கள் பள்ளி ஒன்றிய மேற்பார்வையாளர் உச்சரிப்பு முறைக் கற்பித்தலைத் தொகுத்து சிடியாக வெளியிடச் சொன்னார். அதில் சொல்லுக்கான ஒலிபெயர்ப்பு (Transcription), தமிழ் அர்த்தம், சொல்லின் வகை, உச்சரிப்பு ஆகியவை இருக்கும்.

8 ஆசிரியர்கள் இணைந்து முதல் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தின் அனைத்துச் சொற்களையும் எடுத்துக் கொண்டோம். அவற்றில் இருந்து தொகுப்பு ஒன்றைத் தயாரித்து முதல் பருவத்தை வெளியிட்டோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவங்களுக்கான சொற்களை நானே தயாரித்தேன். சுமார் 10,000 சொற்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கொண்ட தொகுப்பை சிடியாக வெளியிட்டோம். ஆர்வம் கொண்ட பள்ளிகளுக்கு அதை இலவசமாக வழங்கிவருகிறேன்.


தொடுதிரையில் உச்சரிப்பு முறையில் கற்பிக்கும் அன்பாசிரியர் அன்னபூர்ணா என்னுடைய உதவி இல்லாமலே மாணவர்கள் படிக்கவேண்டும். அதனால் என்னுடைய மடிக்கணினியில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளேன். அத்துடன் 4 டேப்லட்டுகளையும் சொந்த செலவில் மாணவர்களுக்காக வாங்கியுள்ளேன். அவற்றின் உதவியோடு புதிய வார்த்தைகளை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.



அசத்தும் அபாகஸ் கற்றல்

ஆர்வத்தின் காரணமாக ரூ.2.50 லட்சம் செலவில் அபாகஸ் படித்தேன். நானே அபாகஸ் உபகரணங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 100 கணக்குகளை என் மாணவர்கள் 5 நிமிடத்தில் போட்டுவிடுவார்கள். கணினி, டேப்லட்டுகள், அபாகஸ் உபகரணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கப் பள்ளியில் இடம் இல்லை.

அதனால் தினமும் அவற்றை பள்ளிக்கு கொண்டுவந்து, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன். பள்ளிக்கு தினமும் 4 பைகளைச் சுமந்துவரும் என்னைப் பலரும் விசித்திரமாகப் பார்த்திருக்கின்றனர்'' என்று சிரிக்கிறார் அன்னபூர்ணா.

அரசுப் பள்ளியொன்றின் 3-ம் வகுப்பு அறை அது. பன்னாட்டுப் பள்ளியொன்றின் வகுப்புக்குள் நுழைந்தது போல, அத்தனை வசதிகளோடு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. கொடையாளர்களின் உதவியோடு இவற்றைக் கட்டவில்லை. என்ன செய்தார் அன்னபூர்ணா? அவரே சொல்கிறார்.

ஆங்கிலப் பாடங்களைப் படிப்பதோடு நிறுத்தாமல், அவற்றைக் கருவாக வைத்து மாணவர்களைக் கொண்டு நாடகம் போட்டோம். அதையும், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புகளையும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவாக இட்டேன். யாரென்றே தெரியாத நண்பர்கள், அதைக் கண்டு மாணவர்களுக்கு உதவினர். அப்போதுதான் அவர்களே நம் மாணவர்களுக்கு உதவும்போது, நாம் ஏன் உதவக்கூடாது என்று தோன்றியது.

முதலில் நம் வகுப்பறையை மாற்றத் திட்டமிட்டேன். யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என்பது என்னுடைய கொள்கை. அதனால் நானே அதைச் செய்ய முடிவுசெய்து, செயல்படுத்தினேன். கையில் அவ்வளவு பணம் இல்லாததால், நகையை அடகு வைத்துப் பணம் புரட்டினேன். கிடைத்த ரூ.1.75 லட்சத்தைக் கொண்டு வகுப்பறைக்குத் தரமான மேசை, நாற்காலிகள், ஸ்மார்ட் வகுப்பறை, தொடுதிரை, மின்விசிறி, தரை ஓவியங்கள் அமைத்தேன்.


தன் சொந்த செலவில் அன்னபூர்ணா அமைத்த வகுப்பறை

ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். மாணவர்களுக்காக நாம் எடுக்கும் முயற்சியை, அடையும் துன்பங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். அப்பாவின் 88-வது பிறந்தநாளுக்காக அம்மாவுக்கு ஒரு தோடு வாங்கினோம். அடகு வைக்கும்போது அதையும் சேர்த்தே வைத்தேன். மாணவர்களிடம் 'அப்பா இப்போது உயிருடன் இல்லை என்றாலும் உங்களுக்காக அதைச் செய்தேன்' என்று கூறினேன்.

பெரும்பாலான மாணவர்களின் கண்கள் கலங்கியிருந்தன. சில மாணவிகள் ஓடிவந்து அம்மா எனக் கட்டிக்கொண்டார்கள். எத்தனை நெகிழ்வான தருணம் அது? அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அதன்பின்னர் இன்னும் அதிகம் அவர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

எதிர்காலத் திட்டங்கள்

எங்கள் வகுப்பறை போலவே பள்ளியின் மற்ற வகுப்பறைகளையும் மாற்றவேண்டும். நேற்று கூட பள்ளிக்குள் பெரிய பாம்பொன்று புகுந்துவிட்டது. மாணவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான சீருடைகளை வழங்கவேண்டும். நம்மையே நாம் ஒருமுறை நிரூபித்துவிட்டால், நிச்சயம் மக்கள் உதவுவார்கள் என்பது என் நம்பிக்கை.

சில ஆசைகளும் இருக்கின்றன. அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் என் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கவேண்டும். ஆங்கிலத்தின் முக்கியத்தையும், தேவையையும் உணர்ந்து தமிழக அரசு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உச்சரிப்பு முறைக் கற்றல், கற்பித்தலை அறிமுகப்படுத்த வேண்டும். ஆங்கிலம் என்ற மொழியின் மீதான பயம் முற்றிலுமாக ஒழிய வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். இவையனைத்தும் நிறைவேறும்பட்சத்தில் ஆசிரியப் பணிக்கான என் நோக்கம் நிறைவேறும்'' என்கிறார் அன்பாசிரியர் அன்னபூர்ணா.

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 35: ஆரோக்கிய ராஜ்- இசைத்து, பாடி, ஆடி பாடம் நடத்தும் ஆசிரியர்!

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு--> ramaniprabhadevi.s@thehindutamil.co.in


அன்பாசிரியர் அன்னபூர்ணாவின் தொடர்பு எண்: 9994219325

GPF/TPF Account Statement-Now Available

 for the year 2014-15 & 2015-16



உங்கள்  TPF  கணக்கை   நீங்களே   சரிபார்க்க  
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :
www.agae.tn.nic.in   என்ற   முகவரிக்குச்   சென்று ,
download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option  ஐ  click  செய்யுங்கள் .
Log in page  வரும் ,  அதில்
GPF no : ( உங்கள்  TPF  எண் .)
Dob :(  உங்கள்   பிறந்த   தேதி ).
Suffix : PTPF
என   கொடுத்து  login  செய்யுங்கள் .
உங்கள்   பெயருடைய  AG  பக்கம்   தோன்றும் .  அதில்
view account slip  ஐ  click  செய்தால்  financial year கேட்கும் ,  அதில் 2014-15 / 2015-16 select  செய்து  view account slip ஐ  click  செய்தால் 2014-15 / 2015-16 ஆம்   ஆண்டிற்கான  account slip download ஆகிவிடும் .  அதை  print  எடுத்துக்கொள்ளுங்கள் .
Print out  செய்த  account statement  ல்  -
1)  உங்கள்   பெயர்
2) TPF  கணக்கு   எண்
3)  பிறந்த   தேதி
4)  கருவூலத்தின்   பெயர்
5)  வட்டிவீதம்
6) 12  மாத   சந்தா   பிடித்தம்   பதிவுகள் ,  கடன்  செலுத்தியபதிவுகள் ,   பெற்ற   கடன்   பதிவுகள்
7) opening/closing balance
8)  விடுபட்ட   சத்தா   விவரங்கள்
9)  கணக்கு   அதிகாரியின்   கையொப்பம் .
என   எல்லா   விவரங்களையும்  சரிபார்த்துக்கொள்ளுங்கள் .
Mobile update  சென்று   உங்கள்  mobile  எண்ணை  பதிவுசெய்யுங்கள் .   கடைசியாக  logout  கொடுத்து  வெளியேறுங்கள் .

பல்கலை.கள், உயர் கல்வி நிலையங்களில் விரைவில் ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் அமல்.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளன. அத்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்தளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழு அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து விட்டார்.
இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பாக பொதுச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதோடு, அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழிக்கான துறைகள் இல்லை என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கண்டறிய வேண்டும். அங்கு ஹிந்தி மொழிக்கான துறைகளை உருவாக்குமாறு ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
மேலும், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் குறைந்தபட்ச ஹிந்தி மொழி வழிக் கல்வி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருக்காத மாநிலங்களில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் ஹிந்தி மொழியில் எழுதும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அவர்கள் தங்களின் தாய் மொழியில்
இத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையில் தன்னாட்சி அளிப்பதற்காக சில சட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் வகுத்து வந்தன. அவற்றின்படி சில பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது.
இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதற்காக சமச்சீரான ஒரு கொள்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து எதிர்ப்பும், விமர்சனமும் எழலாம் என்று தெரிகிறது.
ஏற்கெனவே, கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி அதைத் தடுத்து நிறுத்துமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடக்கப்பட்ட ரேஷன் கார்டு: புதுப்பிக்க வாய்ப்பு

'ஆதார்' விபரங்கள் பதியாததால், முடக்கி வைக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, உணவு துறை வழங்கியுள்ளது.
தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன. நேற்றைய நிலவரப்படி, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 1.31 கோடி கார்டுதாரர்கள், அனைவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர். 56 லட்சம் பேர், பாதி பேரின் ஆதார் விபரங்களை பதிந்துள்ளனர்.
எஞ்சிய, 2.21 லட்சம் பேர், ஒருவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்யாததால், அவற்றை, உணவு துறை அதிகாரிகள் முடக்கி வைத்தனர். அவர்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை. இந்நிலையில், முடக்கிய கார்டுகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு ஆதார் விபரம் கூட பதியாத ரேஷன் கார்டுதாரர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது, 'மொபைல் ஆப்' பகுதிக்கு செல்ல வேண்டும்; அதில், ஸ்மார்ட் அட்டை விண்ணப்பம் என்ற பகுதியில், 'க்ளிக்' செய்தால், புதிய அட்டை விண்ணப்பம், பழைய குடும்ப அட்டை பதிவு என இருக்கும். 
அதில், பழைய அட்டை பதிவு பிரிவுக்கு சென்று, தங்களின் காகித ரேஷன் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். காகித ரேஷன் கார்டின் நகல், குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கிய பின், இறுதியாக, முடக்கப்பட்ட கார்டுதாரருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

NEET : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு

நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில பாடத்திட்டம் இணைக்கப்பட்டு, பாடம் கற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தில், 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாநில பாடத்திட்டத்துக்கு மாறி வந்தனர். ஆனால், நீட், ஜே.இ.இ., உட்பட நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி வருவதால், மீண்டும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர்கள் சிலர் கூறுகையில், 'தேசிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற, எளிதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாணவர்கள் சேர்கின்றனர். அதனால், 8ம் வகுப்பு வரை மட்டும் பாடம் நடத்திய பல பள்ளிகள், மேல்நிலை கல்வி வரை, சி.பி.எஸ்.இ., திட்டத்தில் அனுமதி கேட்டு வருகின்றன' என்றனர்.

பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வரும் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, மே, 7ல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு மதிப்பெண் மட்டும் போதுமா; பிளஸ் 2 மதிப்பெண் தேவையா என, பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த, கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்தில், தகவல் கேட்டிருந்தார்.
அதற்கு, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள பதில்: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும், 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம். பொது பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீதம், மற்ற மாற்றுத் திறனாளிகள், 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பட்டியலில், இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மருத்துவம் படிக்கும் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

TET' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மூன்றாண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 29, 30ம் தேதிகளில், இத்தேர்வு தமிழகம் முழுவதும் நடக்கிறது; 7.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'டெட்' தேர்வுக்கு, மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் இடம்பெற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் இடம் பெற்ற, 3,000 பறக்கும் படைகள், 1,900 நிலையான படைகளையும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைத்துள்ளது. 
தேர்வில் முறைகேட்டுக்கு இடம் அளிக்கக்கூடாது. காப்பியடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நடக்கும் வரை, வினாத்தாள்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பள்ளிக்கல்வி இயக்குனராக இளங்கோவன் நியமனம்

பள்ளிக்கல்வியின் புதிய இயக்குனராக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் நியமிக்கப்பட்டு உள்ளார். பள்ளிக்கல்வி செயலராக பொறுப்பேற்ற உதயச்சந்திரன், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
இதனால், பள்ளிக்கல்வித் துறையில், இதுவரை ஆதிக்கம் செலுத்தியும், ஓ.பி., அடித்தும் காலத்தை ஓட்டிய அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனர்கள், ஆறு பேரை இடமாற்றம் செய்து, செயலர் உதயச்சந்திரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆசிரியர்கள் ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்குப்பின் சேர்ந்தவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளத்தில், 6 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டது. 
இந்த முரண்பாட்டால், 2005க்கு முன் சேர்ந்த சீனியர் ஆசிரியர்கள், 2005க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை விட, குறைந்த ஊக்க ஊதியம் பெறுகின்றனர். இந்த முரண்பாட்டைப் போக்க, 2009 ஜூன், 1ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியத்தின் முரண்பாடுகளை, தலைமை ஆசிரியர்களே சரிசெய்து, அதற்கு கல்வித் துறையில் அனுமதி பெறலாம் என, கூறப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு செயலுக்கு வரவில்லை.
இதனால், அரசாணை பிறப்பித்து, எட்டு ஆண்டுகள் தாண்டிய பின்னும், ஊக்க ஊதியக் குறைபாடு தீரவில்லை. மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TRANSFER 2017 - பள்ளிக்கல்விக்கு புதிய பொது மாறுதல் விண்ணப்பம் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள் (24/04/2017)

NEW TRANSFER APPLICATION FOR DSE

TET தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுக்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் பரிசீலனையில், பலரது புகைப்படம் இல்லாதது, ஓ.எம்.ஆர்., தாளில் கையெழுத்து இல்லாததும் தெரியவந்துள்ளது. மேலும் விண்ணப்பம் ஒப்படைக்கும்போது பலரது ஓ.எம்.ஆர்., சீட்டுகள் மடிக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றை கணினி மூலம் மதிப்பீடு செய்ய முடியாது என்பதால் அவை அனைத்தும், 'டேமேஜ்'ஆக கணக்கிட்டு மாற்று 'சீட்' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 
தேர்வர்கள் பலர் அஜாக்கிரதையாக விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. விண்ணப்பமே சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும்,100க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற தவறுகள் செய்துஉள்ளனர். மாவட்ட அளவில் நடந்த நோடல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ஹால் டிக்கெட்'டில், தேர்வரின் புகைப்படம் இல்லை என்றால், இணைய
தளத்தில் உள்ள அதற்கான சிறப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஓ.எம்,ஆர்., ஷீட்டில் கையெழுத்து இல்லாத தேர்வர்களின் விண்ணப்பத்தில், பிறபக்கங்களில் உள்ள கையெழுத்தை 'ஸ்கேன்' செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு 
செய்யப்பட்டுள்ளது, என்றார்.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு ஜூலை, 25ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். வரும் ஜூலை, 25ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் !!

இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 31 சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்கள் தான் ஓட்டு போட வேண்டும். அந்த வகையில், 784 எம்.பி.,க்கள், 4,114 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.
2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் - 1974ன் கீழ், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு,
'எலக்ட்ரோல் காலேஜ்' என, பெயர். இதன்படி ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708. ஆனால், ஒரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு, அவர் சார்ந்த சட்டசபையின் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி, உ.பி., எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு, 208. மிக குறைந்த ஓட்டு மதிப்பு கொண்டது சிக்கிம் மாநில எம்.எல்.ஏ., தான். அவரது ஓட்டு மதிப்பு, 7 .
3. நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புறமும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றொரு புறமும் உள்ளன. இதுதவிர இந்த இரண்டு தரப்பையும் விருப்பாமல், அ.தி.மு.க., உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகள் மூன்றாவது தரப்பில் உள்ளன.
4. பா.ஜ., கூட்டணியில், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், மொத்தம், 1,691 எம்.எல்.ஏ.,க்கள், 418 எம்.பி.,க்கள் உள்ளனர். ஓட்டு மதிப்புபடி பார்த்தால், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 2,41,757 ; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு,2,95,944 என, மொத்தம், 5,37,683 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 48.64 சதவீதமாகும்.
5. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், 1,710 எம்.எல்.ஏ.,க்கள், 244 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 2,18,987; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 1,73, 460 என மொத்தம், 3,91,739 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 35.47 சதவீதம்.
6. இரண்டு கூட்டணிகளிலும் சேராத தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளம், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி, அரியானாவை சேர்ந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஆகியவை தனியாக உள்ளன. இவர்களிடம், 510 எம்.எல்.ஏ.,க்கள், 109 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த தரப்பின், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, 71,495; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 72,924 என மொத்த ஓட்டுக்களின் மதிப்பு, 1,44,302. இது ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில், 13.06 சதவீதமாகும்.
7. இந்த கணக்குபடி பார்த்தால், காங்., கூட்டணியை விட, பா.ஜ., கூட்டணிக்கு, 13 சதவீத ஓட்டு மதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் நடந்த உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல்களில் பா.ஜ., கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை பெற்றது அந்த கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை, 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
8. காங்., கூட்டணியுடன், எந்த கூட்டணியிலும் சேராத ஆறு கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை சேர்த்தால் கூட, பா.ஜ., சற்று முன்னிலையில் தான் உள்ளது. பா.ஜ., கூட்டணி ஓட்டு மதிப்பு, 48.64 சதவீதம்; காங்., கூட்டணியின் ஓட்டு மதிப்பான, 35.47 சதவீதத்துடன், ஆறு கட்சிகளின் ஓட்டு மதிப்பான, 13.06 சதவீதத்தை சேர்த்தால் கூட, 48.53 சதவீதம் தான் வரும். இது பா.ஜ.,வை விட சிறிதளவு குறைவு தான்.
9. ஜனாதிபதி தேர்தலில் மெஜாரிட்டி ஓட்டுக்களை பெற, ஆறு கட்சிகளில் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளை இழுத்தால் கூட, பா.ஜ., சாதித்து விடும். ஆனால், இந்த ஆறு கட்சிகளை தங்கள் வசம் இழுத்தால் கூட காங்., கூட்டணியால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமே.
10 பா.ஜ., கூட்டணி, காங்., கூட்டணி, ஆறு கட்சிகள் தரப்பு என மூன்று தரப்பையும் சேராத சிறு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு போட உள்ளன. இந்த கட்சிகளிடம், ஓட்டு மதிப்பில், 3 சதவீதம் உள்ளது. வழக்கமாக இதுபோன்ற சிறிய கட்சிகள், ஆளும் கட்சிக்கே சாதகமாக ஓட்டு அளிக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

திங்கள், 24 ஏப்ரல், 2017


EMIS CORRECTION WORK - Announcement

*EMIS CORRECTION WORK*
வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும் EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில்
> இனம்
> பாட மொழி
> பஸ் பாஸ்
> சத்துணவு
> ஆதார் எண்போன்ற விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இணை இயக்குனர்  ( நிர்வாகம்)

ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.

ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:

தற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அதில் ஏற்படக்கூடிய தாமதம், ரயில் டிக்கெட் ரத்து, நடைமேடை எண், குறிப்பிட்ட ஒரு ரயிலின் தற்போதைய நிலை, ரயிலில், துாங்கும் வசதி இருக்கைக்கு வாய்ப்பு உள்ளதா, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இந்த ஆப் அளிக்கும்.டாக்சி சேவையை பதிவு செய்தல், போர்டர் சேவை,ஓய்வு அறை, ஓட்டல், சுற்றுலா பேக்கேஜ், இ - கேட்டரிங் போன்ற, சுற்றுலா தொடர்பான சேவைகளை, புதிய ஆப் மூலம் பெற முடியும். இந்த ஆப் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்களுடன், அதில் கிடைக்கும் வருவாயை, ரயில்வே பகிர்ந்து கொள்ளும்.

இதனால், ஆண்டுதோறும், ரயில்வேக்கு, 100 கோடி ரூபாய்வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ரயில்கள் தாமதமாக வருவது பற்றி, பயணிகளுக்கு தகவல் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபோன்ற குறைபாடுகள், புதிய ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.இந்த புதிய ஆப், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்.

அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.எம்.பி.பி.எஸ்., மாணவி உமா ரவிச்சந்திரனுக்கு, சிறப்பாகதேறியதற்காக, ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல்கலையின் வேந்தர், பட்டம் பெற்ற, 365 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.

பதக்கங்களை வழங்கி, வெங்கையா நாயுடு பேசியதாவது:அரசு மருத்துவமனை இணையதளங்களின் வழியாக, மருத்துவர்களின் சந்திப்பு, மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்த வகைகளை அறிந்து கொள்ள, விரைவில் புதிய வசதிகள் செய்யப்படும். மேலும், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை, தொலைபேசி வழியாக, டாக்டர்களிடம் தெரிந்து கொள்ளவுமான வசதிகளும், விரைவில் துவக்கப்படும். நம் மருத்துவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும், மனிதாபிமானத்துடனும், மருத்துவம் செய்கின்றனர். அதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், மருத்துவ சுற்றுலாவுக்காக, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்கு வருகின்றனர்.ஆனாலும், நாட்டில், 1,668 பேருக்கு, ஒரு அலோபதி மருத்துவர் தான் உள்ளார். அதில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பல்கலை துணைவேந்தர் மூர்த்தி பேசுகையில், ''இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், 39வது இடம்; தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் தேர்வில், 3.62 புள்ளிகளுடன், 'ஏ கிரேடு' பெற்று, ராமச்சந்திரா பல்கலை முன்னிலையில் உள்ளது,'' என்றார்.

NEET' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில்,நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

Download Admit  Card :http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx

எனவே, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள், 'நீட்' தேர்வை ஏற்று கொண்டுள்ளன. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. விண்ணப்ப எண்,பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடு மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அறைக்கு வருவது குறித்த விபரங்களும், ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநில கல்வியியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது; ஆசிரியர்களும் அனைத்து பாடங்களையும் நடத்துவதில்லை; நேரமின்மையால், சில பாடங்களை விட்டு விடுகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், மாணவர்கள், வீடியோ காட்சியுடன் பாடத்தை கற்கலாம். அத்தகைய மாணவர்களுக்கான, சிறப்பு புத்தகமாக,இந்த வீடியோ பதிவுகள் இருக்கும். கோடை விடுமுறைக்கு பின், வீடியோ தயாரிப்பு பணி துவங்கி, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை பாடத்திட்டம் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.

இணையத்தில் மின்னணு குடும்ப அட்டை விவரங்கள் மாற்றத்திற்கான வழிமுறைகள்

மின்னணு குடும்ப அட்டையில் www.tnpds.gov.in என இணையதள முகவரி மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும் சரியான விவரங்களையும், புகைப்படத்தையும்  பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.    
சரியான விவரங்கள், புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்: கணினி உதவியுடன் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இதில் பயனாளர் நுழைவு என்கிற பக்கத்த்தை கிளிக் செய்து, ஏற்கெனவே உங்கள் குடும்ப அட்டையுடன் இணைத்த செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

உடனே உங்கள் செல்லிடப்பேசிக்கு 7 இலக்கத்தில் ஓ.டி.பி ரகசிய எண் வரும், அதை உரிய இடத்தில் பதிவிட்டு பயனாளர் குடும்ப அட்டை விவரங்கள் அடங்கிய பக்கத்திற்கு எளிதாக செல்ல முடியும். அப்பக்கத்தில் மின்னணு குடும்ப அட்டை விவர மாற்றம் என்ற பகுதியை கிளிக் செய்தால் குடும்ப அட்டைதாரரின் முழு விவரங்கள் அடங்கிய ஒரு பக்கம் தோன்றும். அதில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ அதை குடும்ப அட்டைதாரர்களால் மேற்கொள்ள முடியும். இந்த   மாறுதலின் போது அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்வது அவசியம்.

அதில் குடும்ப அட்டைதாரர்கள் தனது குடும்பம் பற்றிய முழு விவரங்களையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அளிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த பின், அந்த விவரங்களை சேமிக்க வேண்டும். அதேபோல் "TNPDS" என்ற செல்போன் செயலி மூலம் குடும்ப அட்டைதாரரின் புகைப்படம் மட்டும் பதிவேற்றம் செய்ய முடியும். இதுபோன்று செய்வதன் மூலம் தனது குடும்பத்தின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் மாறமல் சரியான முறையில் குடும்ப மின்னணு அட்டை அச்சிட்டு பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.