வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது?
வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம்.
அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது. வருமானவரி தாக்கல் செய்த பின் வருமானவரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். வருமானவரித்துறை வரி தாக்கல் செய்தவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் எழுந்தாலோ சரிபார்க்க விரும்பினாலோ, சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.இதை பொதுவாக scrutiny notice என்று குறிப்பிடுவார்கள். இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பதறவோ பயப்படவோ வேண்டாம். சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கலாம். முதலில் இந்த நோட்டீஸ் இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட விவரங்களைமட்டும் கோருவது limited வகை நோட்டீஸ்.
முழுமையான ஆவணங்கள் மற்றும் விவரங்களைக் கோருவது complete வகை நோட்டீஸ். இதில் எந்த வகையான நோட்டீஸ் வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து பதில் அளிக்க வேண்டும். வருமானவரி தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வருமானவரி நோட்டீஸ் அனுப்பப்படும். உதராணமாக, 2017-18ஆம் நிதி ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் ஜூலை 31, 2018 அன்று செய்யப்பட்டால் செப்டம்பர் 30, 2019க்குள் நோட்டீஸ் வரவேண்டும். இந்த அவகாசத்திற்குள் நோட்டீஸ் வந்திருக்கிறதா என்பதை நோட்டீஸில் உள்ள தேதியைப் பார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். அந்த அவகாசத்தில் இல்லை என்றால் அதை வருமானவரி அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.
பொதுவாக வருமானவரி நோட்டீஸ் வந்தால் சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவரின் பிரதிநிதியாக அவருடைய வழக்கறிஞரோ கணக்குத் தணிக்கையாளரோ நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த நடைமுறையை எளிமையாக்க, ‘e-proceeding’ என்ற வசதிஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விவரங்கள் மட்டும் கோரும் நோட்டீஸ்களுக்கு இந்த வருமானவரித்தறை இணையதளத்தின் மூலம் பதில் அளிக்கலாம். வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம். அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது.
எந்த வகையான நோட்டீஸ் அளிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியும் அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் ஆவணங்களைத் தயார் செய்ய முடியாவிட்டால் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது தவறாமல் பான் எண் மற்றும் எந்த நிதி ஆண்டுக்கானது என்பதை குறிப்பிட வேண்டும். நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தால் குறித்த தேதிக்குள் நேரில் ஆஜராகிவிட வேண்டும். இல்லையென்றால் வீண் அபாரதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். ஆவணங்களை பரிசோதிக்கும்வருமானவரி அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களைஏற்கவும் மறுக்கவும் சாத்தியம் உண்டு என்பதால் எப்போதும் சரியான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது நல்லது.
.......................................................................................................................................................................................