தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அதிசயம்: தரமான கல்வியால் வளரும் செல்வநாயகபுரம் அரசுப் பள்ளி..
ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான விருது (2014), சிறந்த அரசுப் பள்ளிக்கான
காமராசர் விருது (2015) என பல விருதுகளையும், பரிசுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது ராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பரிசுகளையெல்லாம் விட மேலாக, சிறந்த பள்ளிக்கூடம் என்று கிராம மக்கள் மனதார இப்பள்ளியை அங்கீகரித்துள்ளனர். அதனாலேயே தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்கள் குழந்தைகளை பல பெற்றோரும் இந்த அரசுப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வரவால் மற்ற ஊர்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததுபோல, இந்தப் பள்ளியிலும் கணிசமாகக் குறைந்தது. 2010-ல் 54 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இந்த ஆண்டில் 117 மாணவர்கள் படிக்கிறார்கள். பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காலகட்டத்தில், குறைந்து போன மாணவர் எண்ணிக்கை இந்தப் பள்ளியில் மட்டும் உயர்ந்துகொண்டே வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கிலவழி வகுப்புகள் செயல்படுகின்றன. இதுபற்றி தலைமை ஆசிரியர் எம்.ஏ.ஜோசப்ராஜ் கூறியதாவது:
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2010-ல் பொறுப்பேற்றேன். அந்த ஆண்டில் 54 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு, பெற்றோரின் ஆங்கிலக் கல்வி மோகம் மட்டுமே காரணம் என நான் நினைக்கவில்லை. ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் பிரதான காரணமாக இருக்கலாம்; எனினும் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளியின் தோற்றத்தை பொலிவோடு வைத்திருப்பது மிக முக்கியம் என்று கருதினேன்.
ஆகவே, பள்ளியின் வசதிகளை மேம்படுத்துவதே முதல் முக்கியப் பணி என கருதி, அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். திறந்து கிடந்த பள்ளி வளாகத்துக்கு முதலில் கம்பி வேலி அமைத்தோம். பிறகு சுற்றுச்சுவர் கட்டினோம். பள்ளி வளாகம் முழுவதும் நிழல் தரும் மரக் கன்றுகள், கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியைத் தரும் மலர்ச் செடிகள், பசுமைத் தோற்றத்தை தரும் விதவிதமான தாவரங்களை நட்டோம். பள்ளி மைதானத்தில் அழகான கற்களை பதித்தோம். வகுப்பறைகள், வராண்டாக்களில் டைல்ஸ் கற்களைப் பதித்து தரைப் பகுதியை மாற்றினோம். எல்லா வகுப்புகளிலும் போதிய மின் விளக்குகள், மின் விசிறிகள் பொருத்தப்பட்டன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. நவீன முறையிலான கழிவறைகளை உருவாக்கினோம். இந்த முயற்சிகள் காரணமாக பள்ளியின் தோற்றத்தில் புத்தம் புதிய பொலிவு ஏற்பட்டது.
பசுமையாக இருக்கும் பள்ளி வளாகத்தில் விளையாடி மகிழும் மாணவர்கள்.
தனியார் பள்ளிகளைப் போலவே மாணவர்களுக்கு அழகான சீருடைகள், பெல்ட், அடையாள அட்டை முதலானவற்றை வழங்கினோம். ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் தினசரி தகவல் தொடர்புக்காக அனைத்து மாணவர்களுக்கும் டைரி விநியோகம் செய்தோம். இதனால் வெளித் தோற்றத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலை ஏற்பட்டது. சொல்லப் போனால் பிற பள்ளி மாணவர்களைவிட எங்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் மிடுக்காகவே காணப்பட்டனர்.
இதே காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான பணிகளையும் தொடங்கினோம். 2013-ம் ஆண்டு முதல் ஆங்கில வழி வகுப்புகளை ஆரம்பித்தோம். தமிழ், ஆங்கிலம் என அனைத்து பாடங்களையும் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் தீவிரமான பயிற்சி தருகிறோம். எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மிக அழகாக இருக்கும். நாங்கள் அளிக்கும் கையெழுத்துப் பயிற்சியே இதற்குக் காரணம்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கியுள்ள அனைத்து கற்றல், கற்பித்தல் உபகரணங்களையும் பயன்படுத்துகிறோம். விளையாட்டுவழிக் கல்வி, மாணவர்களிடத்தில் கற்றல் திறனை அதிகப்படுத்தியுள்ளது.
கல்வி சார்ந்த ஏராளமான பாடல்கள், கதைகள், பட விளக்கங்கள், விளையாட்டுகள் கொண்ட குறுந்தகடுகளை லேப் டாப் மூலம் மாணவர்களுக்கு காண்பித்து, அதன் மூலமாக கற்பிக்கிறோம். வழக்கமாக வகுப்பறையில் நடைபெறும் நிகழ்வுகளை காட்சி வடிவில் பார்க்கும்போது அவர்கள் மனதில் ஆழப் பதிகிறது.
இவை அனைத்தையும் ஒரே ஆண்டில் செய்யவில்லை. 2010 முதல் ஒவ்வொரு முயற்சியாக இத்தனை பணிகளையும் செய்து வருகிறோம். ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிடுவார்கள். இந்த ஒட்டுமொத்த முயற்சியின் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மிக வேகமாக வளர்ந்துள்ளது.
பிற பள்ளி மாணவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் சிறப்பாக இருப்பதை பெற்றோர்களே உணர்ந்துகொண்டனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011-ல் 70 ஆக உயர்ந்த மாணவர் எண்ணிக்கை, 2014-ல் 94 ஆனது. 2015-ல் 101ஆகவும், 2016-ல் 113 ஆகவும் அதிகரித்து, இந்த ஆண்டு 117 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
தலைமை ஆசிரியர் எம்.ஏ.ஜோசப்ராஜ்
எங்கள் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு என்பது பள்ளி வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. நான் உட்பட எங்கள் ஆசிரியர்கள் பலரும் சொந்த பணத்தை பெருமளவில் பள்ளியின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளோம். அதே போல் கிராம மக்களும், கிராம இளைஞர் மன்றத்தினரும், பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பள்ளிக்குத் தேவையான பல வசதிகளை தொடர்ந்து செய்து தருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியின் தினசரி நடவடிக்கைகளை பெற்றோர் உற்று கவனித்தும், கண்காணித்தும் வருகின்றனர். பள்ளியில் மாதந்தோறும் பெற்றோர் கூட்டம், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. உள்ளூர் மக்களின் பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க பள்ளியும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.முன்மாதிரியான இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி இல்லை. அதுவும் இருந்தால் மாணவர்களின் கற்றல் திறனை இன்னும் அதிகரிக்க முடியும் என்பதால், இந்த வசதியை உருவாக்க தலைமை ஆசிரியர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை வசதி வழங்கப்படுகிறது. எனினும், பள்ளியின் வளர்ச்சிப் போக்கை கருத்தில் கொண்டு, செல்வநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை வசதியை ஏற்படுத்தித் தர கல்வித் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க் கின்றனர்.தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94430 05426.