பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து அறியும் பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 14 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பாடத்திட்டத்தை மாற்ற, அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் பதவியேற்றதும், பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றங்கள்துவங்கின.
கருத்துக் கேட்பு கூட்டம்
இதன்படி, 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பாடத் திட்டம் மாற்றப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில், நிபுணர்களிடம்கருத்துகள் பெறப்பட்டன. தொடர்ந்து, நாளை மதுரையிலும், ஆக.,11ல், கோவை; 22ல், சென்னை; 25ல், தஞ்சாவூரில், கருத்துக் கேட்பு கூட்டம்நடக்க உள்ளது.இதைத் தவிர, 'முதல்வன்' திரைப்படத்தில், பொதுமக்களின் கருத்துகளை கேட்க, ஆங்காங்கே புகார் பெட்டி வைப்பது போன்று, தற்போது, பள்ளிகளில், கருத்து அறியும் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.
கருத்தறியும் பெட்டி
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரும், பாடத்திட்ட குழு ஒருங்கிணைப்பாளருமான, கே.அறிவொளிகூறியதாவது:பாடத்திட்ட தயாரிப்பில், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்துறையினரிடம் கருத்து கேட்கப்படுகிறது. மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க, இன்று முதல், 11ம் தேதிவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கருத்தறியும் பெட்டி வைக்கப்படும். ஆசிரியர்களும், மாணவர்களும், பாடத்திட்டம் தொடர்பாக, தங்களின் கருத்துகளை எழுதி, பெட்டியில் போடலாம்.பெயர்களை குறிப்பிட விரும்பாவிட்டால், பாடத்திட்ட கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பலாம். மாவட்டம் முழுவதும் சேர்த்த விபரங்கள், வரும் 18ம் தேதிக்குள், மாவட்டங் களிலிருந்து பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.