சர்வர் முடக்கம்: ஆதார் - பான் இணைப்பில் சிக்கல்....
ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைக்க ஏராளமானோர் முயன்றதால், வருமான வரித்துறை இணையதள, 'சர்வர்' முடங்கியது. வருமான வரி அலுவலகத்தில், காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஜூலை, 31, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, காலக்கெடு, ஆக., 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றம் : முன்னதாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்தது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், ஆதார் - பான் எண்களை இணைக்க, நேற்று, கவுன்டரில், கூட்டம் குவிந்தது. எனினும், ஒரே நேரத்தில், பலரும் வருமான வரித்துறை இணையதளத்தில் நுழைந்ததால், 'சர்வர்' பல மணி நேரம் செயல் இழந்தது.
இதனால், வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆதார் - பான் இணைப்பதில், பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னை, வருமான வரி தலைமை அலுவல கத்தில், 'பயோ மெட்ரிக்' கருவி வைக்கப்பட்டுள்ளது.
அதிக கூட்டம் : இணையதளத்தில், ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், 'பயோ மெட்ரிக்' கருவியை பயன்படுத்தலாம். இதில், கைவிரலை பதித்தால், அது, ஆதார் அட்டையின் போது, பதித்த ரேகையுடன் ஒப்பிட்டு, உடனே, இரு எண்களையும் இணைத்து விடுகிறது. அதனால், இங்கும் அதிக கூட்டம் குவிகிறது.