ஆசிரியர்கள் - மாணவர்களின் கருத்தறிய பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி...
பள்ளி கல்வி பாடத்திட்டம் குறித்த கருத்துக்களை அறிய பள்ளிகளில் கருத்துப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது.
தமிழக அளவில், பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் கடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. பாடத்திட்டத்தை மாற்ற, கல்வியாளர்களும், பெற்றோர்களும் அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இன்று நடைபெற்ற கருத்தரங்கில், பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மற்றும் பட்ளளி கல்வி இயக்ககத்தில் நிபுணர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து, மதுரை, கோவை, சென்னை என கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது. அது மட்டுமல்லாமல் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கருத்தைக் கேட்க கருத்தறியும் பெட்டிகள் வைக்கப்பட உள்ளதாகவும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடத்திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களைப் பெட்டியில் எழுதிப் போடலாம் என்றும், பெயர் குறிப்பிட விருப்பம் இல்லாவிட்டாலும், பாடத்திட்டம் பற்றி கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் அப்போது கூறப்பட்டது.
இவற்றினை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலர் வழியாக மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.