உள்ளூர் மக்கள் தரும் ஊக்கத்தால் உயர்ந்து வரும் உறங்கான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி..
காலை நேரத்தில் பள்ளி வாசலில் வந்து நிற்கும் வாகனங்கள்; வண்ணமயமான சீருடைகளுடன் பள்ளிக்குள் நுழையும் மழலைகள்; வகுப்பறைகளில் டைல்ஸ் பதிக்கப்பட்ட தரைகள்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டி
கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் காட்சிகள் இவை. ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட இந்தப் பள்ளியின் வகுப்பறைகளை முதலில் பார்ப்பவர்களுக்கு இது அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும், உள்ளூர் மக்களும் இந்த அரசுப் பள்ளியை மேம்படுத்த ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்கள். எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிப்பதற்காக தனியார் ஆங்கிலப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அரசு தொடக்கப் பள்ளிக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே, இந்த ஊர் மக்கள் தங்கள் சொந்த செலவில் ஆசிரியர்களை நியமித்து எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான வண்ணமயமான சீருடை, அடையாள அட்டை, புத்தகங்கள், நோட்டுகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி கிடைக்கும் மழலையர் கல்வி, இங்கு இலவசமாகவே கிடைப்பதால், ஏராளமான குழந்தைகள் இந்த மழலையர் வகுப்புகளில் சேருகிறார்கள். அந்தக் குழந்தைகள் அத்தனை பேரும் இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்து விடுவதால் உறங்கான்பட்டி பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
“உள்ளூர் பள்ளியில் வசதிகள் இல்லை என்பதால் தரமான கல்வி கிடைக்கவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது என்பதில் இந்த ஊர் மக்கள் உறுதியாக உள்ளனர். தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கிடைக்கும் எல்லா வசதிகளும் இந்த அரசுப் பள்ளியிலும் கிடைக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். இந்த நோக்கில் பள்ளி மேம்பாட்டுக்காக பல உதவிகளை கிராம மக்கள் செய்துள்ளனர்” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜி.விஜயகுமாரி.
பள்ளி வளர்ந்து வரும் விதம் பற்றி அவர் மேலும் கூறியதாவது:
ஜி.விஜயகுமாரி
நான் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக 2009-ம் ஆண்டில் பொறுப்பேற்றேன். அந்த ஆண்டில் 108 மாணவர்கள் பயின்றனர். அதன் பிறகு தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு அதிக அளவிலான மாணவர்கள் சென்றதால் எங்கள் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இதனையடுத்து, ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்குவது என முடிவெடுத்து, 2012-2013-ம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கினோம். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் ஊர் மக்களின் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டன. அடுத்த ஆண்டில் யோகா, கராத்தே பயிற்சிகளை தொடங்கினோம்.
மாணவர்களின் ஆங்கில கையெழுத்துகளை மேம்படுத்துவதற்காக, அதற்காகவே பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியரை கிராம மக்கள் நியமித்தனர். ஆங்கில உரையாடல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சறுக்குப் பலகைகள் உட்பட மாணவர்கள் விளையாடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன் டிஜிட்டல் போர்டு, புரொஜக்டர் கருவிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை வசதியை ஏற்படுத்தித் தந்தார். பரதநாட்டிய பயிற்சி தொடங்கப்பட்டது. கணித அறிவை மேம்படுத்த அபாகஸ் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் எண், ரத்த வகை, செல்போன் எண் போன்ற விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் தகவல் தொடர்புக்காக மாணவர்களுக்கு டைரி விநியோகிக்கப்பட்டது.
இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.
இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவர் பா.தெய்வேந்திரன். இவர் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். தன்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் பலரை இணைத்து சமூக மையம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அந்த அமைப்பின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை பள்ளிக்கு செய்து வருகிறார். பள்ளியின் வளர்ச்சி பற்றி கருத்து தெரிவித்த அவர், “நான் இந்தப் பள்ளியில் படித்த போது எனக்கு கிடைக்காத பல வசதிகள், இப்போது படிக்கும் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும். அது மட்டுமல்ல; சிங்கப்பூரில் படிக்கும் எனது குழந்தைக்கு கிடைக்கும் தரமான கல்வி, எங்கள் கிராமத்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த நோக்கில் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம்” என்றார்.
மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு
பள்ளி வளாகத்தில் விளையாடி மகிழும் குழந்தைகள். - படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கிராம மக்களும், ஆசிரியர்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளால் மாணவர்களின் கற்றல் திறன் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி, சுற்றியுள்ள 6 வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், சொந்த ஏற்பாட்டில் வாகனங்களை ஏற்பாடு செய்து, தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் முன்மாதிரி பள்ளியாக வளர்ந்து வரும் உறங்கான்பட்டி பள்ளி, 2014-2015-ம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றது. தமிழக அரசு வெளியிட்ட ‘தாயெனப்படுவது தமிழ்’ என்ற குறுந்தகடு எல்லா அரசுப் பள்ளிகளிலும் உள்ளது. தமிழ் செய்யுள் பாடல்களை இன்னிசை, நடனத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் இந்த காணொலித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘யானை வருது.. யானை வருது..’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அந்தப் பாடல் காட்சிகளில் இடம்பெற்றுள்ள குழந்தைகள் அனைவரும் உறங்கான்பட்டி பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இவர்களைத் தவிர எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 40 பேர் பயின்று வருகிறார்கள். ‘யானை வருது’ பாடலைப் போலவே உறங்கான்பட்டி பள்ளியும் பிரபலமடைந்து வருவதே இந்த வளர்ச்சிக்கு காரணம்.
தலைமை ஆசிரியரை தொடர்புகொள்ள: 99444 99761.