பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட வைப்பதா நோக்கம்?
கல்வி பெறும் உரிமைச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவந்து, தொடக்கப் பள்ளி நிலையில்
ஐந்தாவது, எட்டாவது வகுப்பு மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்ச்சி பெற வைக்க மாநிலங்களை அனுமதிப்பது என்ற உத்தேச முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் லட்சக்கணக்கான ஏழை மாணவ, மாணவியர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிடத்தான் வழிசெய்யும். போதிய ஆசிரியர்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைச் செய்துதரத் தவறும் மாநில அரசுகள், ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்துவது அவர்களுடைய பின்தங்கிய சமூக - பொருளாதாரப் பின்னணியைப் புறக்கணிக்கும் அப்பட்டமான மூர்க்கச் செயலாகும்.
மனித வள வளர்ச்சித் துறை 2014-15-ம் ஆண்டுக்காகத் திரட்டிய தரவுகளின்படி, தொடக்கக் கல்வியைப் பாதியில் கைவிட்டோர் எண்ணிக்கை வெறும் 4%தான். இதற்குக் காரணம், தேர்வில் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து படிக்க அனுமதிப்பதுதான். ஆண்டு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைத் தேர்ச்சிசெய்து அனுப்பாமல், அதே வகுப்பில் மேலும் ஓர் ஆண்டு படி என்றால், கிராமப்புற ஏழைப் பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள். படிக்கப் போவதைவிட ஏதாவது வேலைக்குச் சென்றால், குடும்பச் செலவுக்காவது பணம் கிடைக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் தயாராகிவிடுவார்கள் என்று படிப்பை நிறுத்திவிடுவார்கள். ஏழைகளால் தங்களுடைய குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி வகுப்புகளுக்குப் பணம் கொடுத்துப் படிக்க வைக்க முடியாது. இதனால், ஏராளமான குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாமல் எதிர்காலத்தைத் தொலைத்துவிடுவார்கள்.
தேர்வில் தோல்வி என்று மாணவிகளை அடுத்த வகுப்புக்கு அனுப்பாமல் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்கச் சொல்வது ஏழை மாணவிகள் படிப்பைத் தொடர முடியாமல் செய்துவிடும். தேர்வில் தேர்ச்சி பெற்றாலும்கூட பூப்பெய்தும் பெண்களைக் கிராமங்களில் தொடர்ந்து படிக்க அனுமதிப்பதில் தயக்கம் இருக்கிறது. முதலாவது காரணம், பள்ளிக்கூடங்களில் அத்தகைய மாணவிகளுக்குச் சுகாதாரமான கழிப்பறைகளோ, தண்ணீர் வசதிகளோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஏழை மாணவிகள் வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்குக் குறைந்த விலையில் நாப்கின்கள் விற்கப்படுவதில்லை. வீட்டிலிருந்து தொலைதூரத்தில் பள்ளிகள் இருப்பது, உடன் பிறந்த தம்பி – தங்கைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்வது போன்ற காரணங்களாலும் மாணவிகளின் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்படுகிறது.
தேர்வில் தோல்வி அடையும் பெண்களை விரைவாகத் திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். இது இளவயது கர்ப்பத்துக்கும் ஊட்டச் சத்தில்லாத சோகையான குழந்தைகளின் பிறப்புக்கும் வழிவகுக்கும். பெண் குழந்தை என்றாலே பாரம் என்று நினைக்கும் சமூகத்தில், சிறுவயதிலேயே பெண்களைத் திருமணம் செய்துதருவதில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாட்டில், இரண்டாவது ஆண்டாக அதே வகுப்பில் படிக்க வைப்பதா என்று கேட்டு படிப்பை நிறுத்துவதுதான் அடுத்த முடிவாக இருக்கும். கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில், பெண் குழந்தைகளின் பள்ளிப்படிப்புக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைக்கும் யோசனை, ‘பேட்டி பச்சாவோ - பேட்டி படாவோ’ (பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம்) என்ற நோக்கத்துக்கு முரணாக இருக்கிறது.
அரசின் புதிய யோசனை, கல்வி பெறும் உரிமை என்ற உணர்வுக்கு எதிராக இருக்கிறது. 14 வயது வரையில் இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமை என்கிறது கல்வி பெறும் உரிமைச் சட்டம். “இதன் ஒட்டுமொத்த நோக்கமே, தங்களைவிட வயது குறைவான மாணவர்களுடன் வயது முதிர்ந்த மாணவர்கள் படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது” என்று சட்டத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. வயது குறைந்த மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் பெரிய மாணவர்களை ஆசிரியர்களும் மற்றவர்களும் கேலி செய்வதும், சீண்டுவதும் அவர்களுடைய மன உறுதியைக் குலைப்பதுடன் தாழ்மை உணர்வை அதிகரிக்கச் செய்யும். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் பள்ளிக்கூடமே வேண்டாம் என்ற முடிவையே எடுப்பார்கள்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தரமில்லாத கல்வியும்தான் இன்று பல நாடுகளிலும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த இடைவெளியை இட்டுநிரப்பவே தனியார் துறை நாடப்படுகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டுவிடுகின்றனர். திறமையுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையும் போதவில்லை. தனியார் பள்ளிக்கூடங்களில் வசதியான குடும்பத்துப் பிள்ளைகளுடன் படிப்பில் போட்டிபோட முடியாமல் ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகள் தவிக்கின்றனர். இந்த நிலையில், தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை ஒப்பிடுவது நியாயமற்றது.
கல்விபெறும் உரிமைச் சட்டத்தை எந்த விதத்திலும் மட்டுப்படுத்தக் கூடாது. நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளியிறுதி வகுப்பு வரையில் தொடர்ந்து படிக்க இது பேருதவியாக இருந்துவருகிறது. இந்தச் சட்டம் அளிக்கும் உத்தரவாதத்தை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி நிலையிலேயே குலைப்பது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை.