அங்கன்வாடி மைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு....
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 1104 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனசுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர், தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லீம் தவிர), தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) என தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ளது.
அதில், முதன்மை அங்கன்வாடி- 544 காலி பணியிடம், குறு அங்கன்வாடி மைய பணியாளர்-77, அங்கன்வாடி மைய உதவியாளர்-483 என மொத்தம் 1104 காலி பணியிடங்கள் உள்ளன. முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி மைய பணியாளருக்கான தகுதிகள்- 1.7.2017 அன்று 25 வயது முடிந்தும், 35 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்- 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள்- 20 முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 25 வயது முதல் 38 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி- மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், மற்றவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் காலி பணியிடம் சார்ந்த அதே கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியான நபர் அக்கிராமத்தில் இல்லாவிட்டால், அதே ஊராட்சியை சேர்ந்த அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட கிராம ஊராட்சியில் தகுதியான நபர் இல்லாவிட்டால், 10 கி.மீ., தொலைவிற்கு உட்பட்ட அருகில் உள்ள ஊராட்சியை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். நகர்புறத்தில் அதே வார்டினை சேர்ந்தவராக இருக்க வேண்டும், அல்லாத பட்சத்தில் அருகில் உள்ள வார்டினை சேர்ந்தவரை தேர்வு செய்யலாம். வசிப்பிட ஆதாரத்திற்கு வாக்களர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளருக்கான தகுதிகள்- 20 வயது முடிந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வி தகுதி எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. குடியிருப்பு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூறிய அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். ஆகஸ்ட் 17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களை அணுகலாம் என அதில் தெரிவித்துள்ளார்.