'ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தனியாக நிதி ஒதுக்க வேண்டும்' அப்துல்கலாம் விருது பெற்ற தியாகராஜன் வேண்டுகோள்
சென்னை, :''தமிழக அரசு புதிய பாட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதோடு, அதற்கேற்ப ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். இதற்காக தனியாக நிதி ஒதுக்க வேண்டும்,'' என, தமிழக அரசின் அப்துல்கலாம் விருது பெற்ற, விஞ்ஞானி தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழக அரசின், டாக்டர் அப்துல்கலாம் விருது, சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர், தியாகராஜனுக்கு, நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் பழனிசாமி வழங்கினார். எட்டு கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கம், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இவர், எட்டு கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமை பெற்றுள்ளார். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு, செவாலியேவிருது வழங்கி, கவுரவித்துள்ளது.
விருது பெற்றது குறித்து, தியாகராஜன் கூறியதாவது:
உயர்கல்வித்துறை யில், 50 ஆண்டுகளாக உள்ளேன். சென்னை பல்கலையில் துணைவேந்தர் உட்பட, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். தமிழக அரசு விருது; அதிலும், அப்துல்கலாம் பெயரிலான விருது பெற்றது, இரட்டிப்பு மகிழ்ச்சி. கலாமுடன் நெருங்கி பழகி உள்ளேன். அவர், சென்னை பல்கலை, 150வது ஆண்டு விழாவிற்கு, பல வகைகளில் உதவினார்.
கல்வித்தரம் மற்றும் ஆய்வுத்தரம் உயர்ந்தால்தான், நாடு முன்னேறும். இந்த திறமைகளை, மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வியாக இருந்தாலும், உயர் கல்வியாக இருந்தாலும், மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தால் தான், கல்வித்தரம் மேம்படும். அதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைத்தால், நாடு வளர்ச்சி அடையும்.
கல்வித்தரம் உயர்ந்தால் தான், நாட்டின் தரம் உயரும். தமிழக அரசு புதிய பாடத் திட்டங்களை உருவாக்கி வருகிறது; அதற்கேற்ப ஆசிரியர்களையும் உருவாக்க வேண்டும். ஆசிரியர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, தனியாக நிதி ஒதுக்க வேண்டும்.
சிறந்த ஆசிரியர்களை உருவாக்க, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்களை, பயன்படுத்திக் கொள்ளலாம். தரமான ஆசிரியர்கள் இருந்தால் தான், தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.
நான், 50 ஆண்டு களில், 76 நாடுகளுடன் இணைந்து, 75 ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். அதன் பயனாக, 345 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். நம் நாட்டின் மூலிகைகளை, வெளிநாட்டில் பரவ செய்ய வேண்டும் என, முடிவு செய்தேன். அதற்காக, மஞ்சள்
காமாலையை உருவாக்கும், 'ஹெப்பட்டைடில் பி மற்றும் சி' வைரஸ்களை, கீழா நெல்லி மூலிகையால், அடியோடு ஒழிக்க முடியும்; அதன் வளர்ச்சியை தடுக்க முடியும் என, விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்துள்ளோம்.
இதன்படி, சென்னை பல்கலைக்காக, காப்புரிமை பெற்று, மருந்து நிறுவனத்துடன் இணைந்து, 'வைரோ ஹெப்' என்ற, மாத்திரை தயாரித்தோம். அதற்கான, ராயல்டியும் சென்னை பல்கலைக்கு கிடைத்து வருகிறது.
இவ்வாறு தியாகராஜன் கூறினார்.