5,8ம் வகுப்புக்கு பொது தேர்வு?: செங்கோட்டையன் விளக்கம்...
''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். இது பற்றி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு முறையாக எந்த தகவலும் வரவில்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் நேற்று நடந்த, தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவித்தார். குளம், குட்டைகளை துார்வாரி, மண்ணை, விவசாயிகளே எடுத்துக் கொள்ள அறிவித்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, முதற்கட்டமாக, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளை துவங்க செய்துள்ளார். இத்தனை பணிகளை செய்து வரும் நிலையில், இந்த ஆட்சி நிலைக்குமா என, பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். இன்னும் நான்காண்டு மட்டுமல்ல, 400 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி நிலைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டியில், ''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். ''இது பற்றி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு முறையாக எந்த தகவலும் வரவில்லை. அவ்வாறு வந்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.