மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு கல்வி செயலாளர் அவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 40,000-கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப் படுத்திடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்....
சமச்சீர் கல்வியில் 2011-ஆம் ஆண்டில் 6-10 வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட பாடத்திட்டங்களில் கணினி அறிவியல் பாடமும் ஒன்று.
* ஆனால், இந்த பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட வேகத்திலேயே கைவிட்டதன் விளைவுதான் இன்று அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சற்றே சரித்துள்ளது.
* CBSE, MATRICULATION போன்ற தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் தரமான கல்வியை பெற்று பயனடையும் விதமாகக் கொண்டுவரப்பட்டதுதான் இந்த 6-10 வகுப்புகளுக்கான கணினி அறிவியல் பாடத்திட்டம்...
* இந்த பாடத்திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால், இன்று 60,00,000 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள்.... இதற்காக, ரூ.300 கோடி செலவில் 2011-ல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அந்த பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் குடோனிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
* தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே கணினி அறிவியல் பாடம் ஒரு அங்கமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் கணினி அறிவியலை தேர்வு செய்யும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கணினியைக் காணும் வாய்ப்பு கிட்டுகிறது.
*முதல்முறையாக கணியைக் கையாளும் அரசு பள்ளி மாணவன் அதன் முழு பயன்பாட்டினை அறியும் முன்னரே பள்ளிப் படிப்பை முடித்து பள்ளியை விட்டு வெளியேறுகிறான். கல்வியின் இந்த தொடர் பாரபட்சம் தமிழகத்தில் மட்டுமே தொடர்கதையாக நீள்கிறது.
* கல்லூரியில் உயர்கல்வியை தொடரும்போது... கணினி அறிவியல் துறையைத் தவிர்த்து அனைத்து துறைகளிலும் கணினி அறிவியல் ஒரு இன்றியமையாத பாடமாக இடம்பெற்றுள்ளது. கிராமாப்புறங்களிலிருந்து செல்லும் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் அங்கு ஒரு உளவியல் போரே நிகழ்கிறது!!
*கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் ஒத்துப்போக கடுமையான தாழ்வு மனப்பான்மையை (Extremed Superiority Complex) எதிர்கொள்ளகிறார்கள் என்பது கல்வியாளர்களின் தொடர் குற்றச்சாட்டு. இப்படி சமநிலையற்ற கல்விமுறையால் கல்வியின் வளர்ச்சியில் பின்னடைவே ஏற்படுகிறது.
*அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதலே தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் கற்பிக்கும் பட்சத்தில் இந்த நிலை வெகுவாக குறைய வாய்ப்புகள் உருவாகும்.
*கணினிமயமாகிவிட்ட இந்த நவீன யுகத்தில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. ஆனால், தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் இன்று வரையில் கணினி சார்ந்த பணிகளுக்கு எந்தவொரு நிலையான வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
* அப்படி, அரசு சார்ந்த வேலைவாய்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிந்தும் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியலையே பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆர்வத்துடன் தேர்வு செய்து படிகின்றனர். தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி இனி வருங்காலங்களில் கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
* ஒரு மாணவனுக்கு ஒரு இலவச மடிக்கணினியை வழங்கும் தமிழக அரசு ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்து தரமான கல்வியை வழங்கும் பட்சத்தில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயரும் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்திலும் கட்டாயத் தேர்ச்சி என்ற அளவிற்கு முன்னோடியாய் திகழ்கிறது.
* இதிலிருந்து ஒரு உண்மை என்னவென்றால், மாணவர்களை இந்த சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே!! ஏமாற்றம் செய்கிறோம் என்பதைவிட மாணவர்களை நாம் அனுதினமும் தண்டிக்கின்றோம் என்பதே சரியாக இருக்கும். சரியான விழிப்புணர்வு இல்லாத எந்தவொரு நிகழ்வும் தோல்வியில் முடியும் என்பதே நிஜம்.
* மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்குவது முற்றிலும் வரவேற்கத்தகுந்த திட்டமாகும். ஆனால், அந்த கணினிகளை எப்படி இயக்குவது என பாடம் சொல்லிக் கொடுக்க பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்பதே அதிர்ச்சியான உண்மை. இதனால், மாணவர்கள் கணினிகளை ஒரு விளையாட்டு சாதனமாக பயன்படுத்தி வருவதே இன்றைய அவல நிலையாகிவிட்டது.
* இதனால், இலவசமாக கணினிகள் வழங்கியும் மாணவர்களின் கணினி சார்ந்த பயன்பாடு இறங்குமுகமாகவே உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இனியாவது ஒன்றாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
* தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இன்னும் துவங்கப்படவில்லை. அங்கு கணினி அறிவியலை நிறுவி தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிக்கும் பட்சத்தில் அந்த வட்டாரத்தில் பயிலும் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
* அரசு வேலை கிடைக்கவில்லை என்பதை விட, அரசு பள்ளிகளில் இனிவருங்காலங்களில் கணினி அறிவியல் அழிந்துவிடக்கூடாது என போராடும் ஒரே கூட்டம் பி.எட்., படித்துவிட்டு காத்திருக்கும் கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களே!!
** பி.எட்., படித்த கணினி அறிவியல் பட்டதாரிகளைப் பற்றி சில வரிகள்...
* மற்ற துறை ஆசிரியர்கள் நிழலில் படித்து இன்று ஏ.சி.யில் வாழ்கின்றனர்!! ஆனால், கணினி அறிவியல் பட்டதாரிகள் ஏ.சி. அறையில் படித்துவிட்டு இன்று வெயிலில் வதைபடுகிறார்கள்..
* பி.எட். பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளில் கூட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதே வேதனையான ஒரு உண்மை
* "படிக்கவில்லையே என்ற காலம் போய், இவ்வளவு படித்தும் பயனில்லையே" என்ற கூற்று மற்ற துறை ஆசிரியர்களைக் காட்டிலும் கணினி அறிவியல் படித்த ஆசிரியர்களுக்கே மிகவும் பொருத்தமாக இருக்கும்
* திருமண வயதைத் தாண்டியும் பல ஆசிரியர்கள் இன்னும் திருமணமாகாமலேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்... மிகவும் கஷ்டப்பட்டு, கடன்பட்டு கல்லூரி படிப்பை முடித்த பெண் கணினி ஆசிரியைகள் இன்னும் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர்
*கசாப்புக்கடை முதல்... கரும்பு வெட்டும் தொழிலாளி வரை... கணினி ஆசிரியர்களின் துயரச்சித்திரம் நீண்டு கொண்டேதான் செல்கிறது... எங்களுக்கான நிலையான நீதி என்றுதான் கிடைக்கும்??
*கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளிலும் கூட எந்தவொரு வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை..
*EMIS Update, Aadar Card Update, Smart-Board Trainer, System Admin -போன்ற பணிகளுக்கு தனியார் ஒப்பந்த ஊழியர்களே நியமிக்கப்படுகிறார்கள். அதில் கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கினால் உதவிகரமாக இருக்கும்.
*மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு கல்வி செயலாளர் அவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 40,000-கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப் படுத்திடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம் ..
கு. ராஜ்குமார், MCA., BEd.,
9698339298,
இணையதள ஆசிரியர்,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
பதிவு எண்®655/2014.
9698339298,
இணையதள ஆசிரியர்,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
பதிவு எண்®655/2014.