ஆகஸ்ட் 17ல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு?... நீட் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையா?
சென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதன காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் நீட் தேர்வு கேள்விகளில் தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீட் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
தோல்வியில் முடிந்த முயற்சிகள்
ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஎஸ்இ நீட் முடிவுகளை அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் மன்றாடி வருகிறது. இதுவரை தமிழகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. மேலும் மாநில பாடத் திட்டத்தில் படித்தோருக்கான 85 சதவீத் உள் இடஒதுக்கீடு அளித்து பிறப்பித்த அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ல் கலந்தாய்வு?
பொறியியல் கலந்தாய்வு இன்றோடு நடத்தி முடிக்கப்படும் நிலையில் இரண்டாம் கட்ட துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ கலந்தாய்வை வழக்கமான முறையில் நடத்த அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவிய நிலையில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தரவரிசைப் பட்டியல்
மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தரவரிசைப் பட்டியல் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது தள்ளிப் போனது நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
களக்கத்தில் மாணவர்கள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும், தங்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர் கிராமப்புற மாணவர்கள். ஆனால் அவர்களது எண்ணத்தில் பேரிடியை இறக்கியுள்ளது இந்தத் தகவல்.