அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை வரும் ஜனவரி 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவால் தமிழகத்தில் வீடு மற்றும் மனை விற்பனை முடங்கியதால் பத்திரப் பதிவும் கடும் பாதிப்பை சந்தித்தது. இவ்வழக்கு கடந்த 2016 அக்டோபர் 21-ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 20 வரை பதிவான மனைகளின், மறு விற்பனையை அனுமதிப்பதற்கான அரசாணை நகல் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் நிலங்களின் வகைப்பாட்டு விவரங்களை பட்டியலிட்டு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் அடுத்தடுத்து நவம்பர் 16 மற்றும் டிசம்பர் 5-ம் தேதிகளில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, அங்கீகாரமில்லாத மனைகளை வரன் முறை செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திட்ட செயலாக்கம் குறித்த, முழு விபரங்களை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று அதாவது ஜனவரி 9-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நிலங்களை வகைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். நிலங்களை வகைப்படுத்த மேலும் 2 வார காலம் அவகாசம் கேட்டு அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி தடையை ஜனவரி 30-ம் தேதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மறுபரிசீலனை செய்ய கோரிக்கை:
பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தரப்பு வாதிட்டது. மேலும் பிரச்சனைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் கோரினர். நிபந்தனைகளுக்குட்பட்டு பத்திரப்பதிவு செய்ய உத்தரவிடுமாறும் நீதிபதிகளிடம் ரியல் எஸ்டேட் தரப்பினர் வாதிட்டனர்.