மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமையுமா:ஓய்வூதியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்
மதுரை மாவட்டத்திலுள்ள 42 ஆயிரம் ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும்,' என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசின் பல்வேறு துறைகளில் 2003க்கு முன்பாக பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாவட்ட மற்றும் சார் நிலை கருவூலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சென்னை ஓய்வூதியர்களுக்கான அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதனால் நிலுவை தொகை உட்பட பல்வேறு சலுகைகளை உடனடியாக பெற முடிகிறது.
மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஓய்வூதியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான ஓய்வூதியம் மாவட்ட கருவூலம் மற்றும் நான்கு சார்நிலை கருவூலகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. உயிர்சான்று சரிபார்ப்பு, நிலுவை தொகை மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்காக தினமும் ஏராளமான ஓய்வூதியர்கள் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகங்களில் அரசு துறையினருக்கான சம்பளம் மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்படுவதால் பணி சுமையும் கூடுதலாக உள்ளது. ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது.இதை கருத்தில் கொண்டு மதுரையில் மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
மண்டல கருவூலத்துறை இணை இயக்குனரகமும் ஓய்வூதிய அலுவலகம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் காளிதாஸ் கூறியதாவது: மதுரை பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது அனைத்து அலுவலகங்களும் இங்கு இருந்தன. இதனால் எல்லா அரசு அலுவலர்களும் இங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்றனர்.மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போதும் கூட மதுரையிலிருந்து சென்று வந்தனர். இதனால் மதுரையில் 42 ஆயிரம் ஓய்வூதியர்கள் வசிக்கின்றனர்.
உ.பி., மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஓய்வூதிய அலுவலகங்கள் இரண்டு, மூன்று மாவட்டங்களில் உள்ளன. எனவே மதுரையிலும் ஓய்வூதிய அலுவலகம் திறக்க வேண்டும், என்றார்.