10ம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கு ஒரு தாள் தேர்வு முறை!
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திற்கு ஒருதாள் தேர்வுமுறையை செயல்படுத்த வேண்டும்,’ என
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. அக்கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: பத்தாம் வகுப்பு அரசு தேர்தவில் சமீப காலமாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.
இது தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதையே காட்டுகிறது. ஆங்கில பாடத்தில் கூட தேர்ச்சியாகும் மாணவர்கள் தாய்மொழியில் தோல்வி அடைவது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. தமிழில் தோல்வி அடைந்தோர் மீண்டும் தேர்வு எழுத முன்வருவதில்லை.
அவர்கள் படிப்பை விட்டு கூலி வேலைகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதற்கான காரணங்களை கல்வித்துறை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் பாடங்களை போன்று தமிழுக்கும் ஒரு தாள் தேர்வு முறையை செயல்படுத்த வேண்டும்.
மேலும் தற்போது உள்ள தமிழ் பாட திட்டவரைவு மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனை மாற்றியமைக்க வேண்டும். பிளஸ் 2 வில் மொழி பாடங்களுக்கு 20 மதிப்பெண்களுக்கு அகமதிப்பீடு தேர்வு இருப்பதை போன்று 10ம் வகுப்பிற்கும் செயல்படுத்த வேண்டும்.
இந்த ஆண்டு 10 ம் வகுப்பு அரசு தேர்வில் தமிழ் 2 ம் தாள் பாடத்தை படிப்பதற்கு விடுமுறை இல்லை. அவற்றை மாற்றியமைக்க வேண்டும், என்றார்.