கிராமப்புறம் என்றாலே திறந்தவெளிக் கழிப்பிடமும் இருக்கும் என்ற பொதுவான சிந்தனையிலிருந்து
மாறுபட்டுள்ளது கோவை மலுமிச்சம்பட்டி கிராமம். ‘எங்கள் ஊரில் திறந்தவெளிக் கழிப்பிடங் கள் இல்லை, அதனால் நோய்த் தொற்றுகளும் இல்லை’ என மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு சுகாதாரமான சூழலை அங்கு ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்த பணியைச் செய்தது, அரசு தொடக்கப் பள்ளி யில் பயிலும் சின்னஞ்சிறு சிறுவர்கள் என்பது தான் வியப்பான செய்தி.
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மலுமிச்சம்பட்டி. கோவை மாநகரை ஒட்டிய, கிராமப்புறம் என்பதால் வளர்ச்சிக் குறியீடுகள் இங்கு அதிகம். அதேசமயம் கிராம ஊராட்சி என்பதால் அடிப்படை வசதிகள் சற்று குறைவு. ஆனால், கல்விக்கு மட்டும் இங்கு எந்தக் குறையும் இல்லை. தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்களின் உதவியால் அரசுப் பள்ளிகளே இங்கு மாதிரிப் பள்ளிகளைப் போல மிளிர்கின்றன. அதன் பலனாக சிறுவயதிலேயே கல்வியோடு, சமூகநலனையும் இங்குள்ள மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வருகிறார்கள்.
தடையில்லா கல்வி கற்க சுகாதாரமான சூழலும் அவசியம் என்பதை உணர்ந்து தங்களது கிராமத்தை திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத கிராமமாக மாற்றியுள்ளனர் இங்குள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள். இந்த பணிக்காக மாவட்ட ஆட்சியரின் விருதையும் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.
கமாண்டோ படை
‘மொத்தம் 10 மாணவர்கள். குட்டி கமாண்டோ படை’ என்பது அவர்களது குழுவின் பெயர். முக்கிய நோக்கம் கிராமத்தைக் காப்பது. அதாவது, திறந்தவெளியில் மலம் கழித்து கிராமத்தை அசுத்தப்படுத்த நினைப்பவர்களை விரட்டுவது. அதற்காக இவர்கள் எடுத்த ஆயுதம் விசில்.
‘அதிகாலை நேரத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்க யாராவது ஒதுங்குகிறார்களா என கண்காணித்து, விசில் அடித்து அவர்களை ஓட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 6 மாதமாக இந்தப் பணி தொடர்கிறது. இதனால் கிராமமே சுத்தமான காற்றை சுவாசிக்கும் நிலைக்கு மாறியுள்ளது’ என்கின்றனர் பொதுமக்கள்.
மாணவர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு பதாகை. (அடுத்த படம்) சுதந்திர தின நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற மலுமிச்சம்பட்டி தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள்.
பள்ளித் தலைமையாசிரியை ஆர்.சதி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை நம் கிராமத்திலிருந்து தொடங்கலாம் என மாணவர்கள் ஆலோசனை கூறினார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் தாங்களே ஒரு குழுவை உருவாக்கி திறந்தவெளியில் யாரையும் இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூடாது என முடிவு செய்தனர். மீறுவோரை விசில் அடித்து விரட்டுகிறார்கள்.
அதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை இவர்களது கண்காணிப்புப் பணி இருக்கும். இதனால் கிராமத்தின் சூழலே மாறிவிட்டது. பலரும் வீடுகளிலேயே கழிப்பிடம் கட்டிவிட்டனர். வசதி இல்லாதவர்கள் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்துகிறார்கள்.
இடையே, பொதுக்கழிப்பிடத்திலும் தண்ணீர் வருவதில்லை, மின் இணைப்பும் இல்லை என பிரச்சினை வந்தது. அதையும் இந்த மாணவர்களே ஊராட்சி மன்றத்தில் தெரிவித்து சரிசெய்துவிட்டனர்.
இந்த முயற்சியால் குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் குறைந்து, இடைநிற்றல் குறைந்துள்ளது. மாணவர் எண்ணிக்கை 150-ல் இருந்து 280 ஆக உயர்ந்துள்ளது’ என்றார்.
ஒரு பள்ளி, நல்ல மாணவர்களை உருவாக்கினால்தான், அந்த மாணவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள். அதற்கு மலுமிச்சம்பட்டி கிராமம் ஓர் உதாரணம்.