அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போல் அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு: படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல், அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவுமுறையை விரைவில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மோடிதலைமையிலான பாஜக ஆட்சிக்குவந்ததும், மத்திய அரசு அலுவலகங்களில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு எதிர்ப்பு வந்தாலும் பின்னர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் இதர துறைகளின் தலைமை அலுவலகங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுஅலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த2017-ம் ஆண்டு டிசம்பரில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு பணிகள் நடந்தன.ஆனால் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.அதேநேரம், பதிவுத்துறை தலைவர் அலுவலகம், டிஎம்எஸ் உள்ளிட்ட சில முக்கிய துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம்முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு, ஊதியம் சர்வீஸ் ஃபைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடந்து வருகின்றன. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகைப்பதிவேடு, விடுமுறை உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைக்க, பயோமெட்ரிக் முறையை அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசின் வரவு - செலவு மற்றும் அரசு ஊழியர்களின் பணி விவரம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில் அறியும் வகையில்ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் டிஜிட்டல் கையொப்பம், பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்றபாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகிறது. இதில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர்களைப் போல் அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. துறைகள்வாரியாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பதால் படிப்படியாக கொண்டு வரப்படும். தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த வருகைப்பதிவேடு முறை அமலில் உள்ளது. கணினி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பயோமெட்ரிக் முறை காலத்தின் கட்டாயம்.இதற்கிடையே, வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலர்களில் பலர் களப்பணியாளர்களாக இருப்பதால், பயோமெட்ரிக் வருகைப்பதிவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றையும் கருத்தில் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.
வருகையில் முரண்
அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகை உள்ளது, மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் ‘பெர்மிஷன்’ கொடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தி வந்தால் ‘பெர்மிஷனில்’ கழித்துக்கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை காலை 9.20 முதல் 4.10 மணிவரை பணி நேரம். ஆனால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்காகவே பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை அரசுஅமல்படுத்த நடவடிக்கை எடுத் துள்ளதாகக் கூறப்படுகிறது.