புவி வெப்பமயமாதல்: இந்தியாவுக்கு எச்சரிக்கை
புதுடில்லி: வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கனமழை
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய வழக்கமான மழையை விட, கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டரை மடங்கு மழை பெய்துள்ளதாக வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். கடந்த 10ம் தேதி, மாநிலத்தில் உள்ள 35 அணைகள் முழுவதும் நிரம்பின. 26 ஆண்டுக்கு பின் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டது.
உயிரிழப்பு அதிகரிப்பு
இந்நிலையில், கேரள கனமழை குறித்து இந்திய வெப்பமண்டல வானிலை தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி ராக்சி மேத்யூ கூறுகையில், கேரள வெள்ளம் போன்ற ஒரு இயற்கை சீற்றங்களை வைத்து பருவிலை மாற்றத்தை தொடர்புபடுத்துவது கடினம். இந்தியாவில் 1950 - 2017 ஆண்டுக்ள் பெய்யும் கனமழையின் அளவு மும்டங்கு அதிகரித்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இது தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறினார். இதேகாலகட்டத்தில், கனமழை காரணமாக 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடியே 7 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடினம்
ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி கிரா வின்கே கூறியதாவது: கேரளாவில் தற்போது ஏற்பட்ட பெரு வெள்ளம், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியே. நாம் இன்னும் மாசு அளவை அதிகரித்து கொண்டே சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். பருவநிலையை கணிப்பது மேலும் கடினமாகி கொண்டு போகிறது. இந்தியாவில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டால், மழைகாலங்களில் அதிக மழை பெய்யும். வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். என்றார்.
அதிக மழை
ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானி எலினா என்பவர் கூறுகையில், சில ஆண்டுகளாக, பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மத்திய மற்றும் தெற்கு இந்தியாவில் அதிக மழை பெய்வதாக கூறினார்.
பாதிக்கும்
இந்தியா, சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால்,மாறி வரும் பருவநிலையும் வெப்ப அளவு கூடுதலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா ஜிடிபியில் 2.8 சதவீதத்தை இழப்பது மட்டுமல்லாமல், பாதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்தியாவில் வெப்பநிலையானது 1.5 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது.