வரலட்சுமியே வருக! சுப வாழ்வு தருக!! இன்று வரலட்சுமி விரதம்
வரலட்சுமி தாயே! நாராயணரின் திருமார்பில் உறைபவளே! ஸ்ரீபீடத்தில் அருள்பவளே! செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! மதுர வல்லித்தாயே!
உன் திருவடியைப் போற்றும் எங்களுக்கு மங்கள வாழ்வு தந்தருள்வாயாக.*பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக் கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரின் மனதில் குடியிருப்பவளே! குபேரனுக்கு வாழ்வு தருபவளே! சுபவாழ்வு தரும் உமது தாமரைத் திருவடிகளைச் சரணடைகிறோம்.*அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கியவளே! அருளாளர்களின் உள்ளத் தாமரையை இருப்பிட மாக கொண்டவளே! அலங்கார நாயகியே! உன் கடைக்கண் பார்வை எங்கள் இல்லத்தில் என்றும் நிலைக்கட்டும். *பூங்கொடி போன்றவளே! இளமயிலே! அலமேலு மங்கைத்தாயாரே! தேவரும், மூவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் உதித்த அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.*முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரை தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் உறைபவளே! நிலவு போல குளிர்ந்த பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.*நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த நிறம் கொண்டவளே! குறையில்லாத வாழ்வருளும் கோமளவல்லியே! செங்கமல வல்லியே! பெருந் தேவித் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும்.*மங்கள ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வேண்டிய வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரை மலரை இருப்பிடமாக உடையவளே! உன் அருளால் இந்த உலகம் செழிக்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.