கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியில் நெறிமுறை பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. வரும் கல்வியாண்டில் 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ``பட்டய கணக்காளர்கள் ் அதிகளவில் தேவைப்படுவதால், அந்த படிப்பை ஊக்குவிக்கும் வகையில், பிளஸ்-2 வணிகவியல் படிக்கும் மாணவர்களில், சிஏ நுழைவுத் தேர்வுக்காக வரும் ஆண்டில் 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பட்டய கணக்காளர்கள் எனப்படும் தணிக்கையாளர்கள் தேர்வுக்காக அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்பு ஆண்டிலேயே தேர்வு செய்து 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தமிழக கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிப்பது குறித்து பணியாளர் நல துறையுடன் அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்’’ என்று கூறினார்