ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை குறைப்பு
காரைக்குடி:செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒதுக்கீடு முறையில் ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 23 பேர் இதை பெற்றனர். நடப்பாண்டில் மாநில ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டு தலை சிறந்த ஆசிரியர்களுக்கே இந்த விருது வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
பள்ளி செயல்பாடுகளின் அடிப்படையில் ஆன்லைனில் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் மாவட்ட வாரியாக மூன்று பேரை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், கலெக்டரால் நியமிக்கப்பட்ட கல்வியாளர் ஒருவர் அடங்கிய குழு மாநில குழுவுக்கு பரிந்துரைத்தது. இதன்படி 90க்கும் மேற்பட்டோர் பரிந்துரைக்கப்பட்டனர். மாநில குழு இதில் ஆறு பேரை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை ரேஷ்மி, கோவை சத்தி, காஞ்சிபுரம் மாதவன், கரூர் செல்வகண்ணன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பீட்டர்ராஜா, திருவள்ளூர் சாந்தி இதில் இடம் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு ஆக.16 முதல் 21 வரை டில்லியில் நேர்காணல் நடக்கிறது. இந்தியா முழுவதும் 157 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 45 பேருக்கு மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதால் தேசிய நல்லாசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.