தனியார் பள்ளிகளிலும்TET தேர்ச்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவு - கல்வியாளர்கள் கருத்துகள்....
தனியார் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது பள்ளிக்கல்வித் துறை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கையையும் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் `அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டே பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் 31.03.2015-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், நான்கு ஆண்டுக்குள் அதாவது 31.03.2019-க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் சிலருடன் பேசினோம்.
தனியார் பள்ளிதனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வர் `ஆயிஷா' நடராஜன்...
“கல்வி உரிமைச் சட்டம், 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதில் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற எந்தவிதமான பாகுபாடும் இல்லை. ஆரம்பத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. மத்திய அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசுப் பள்ளிகளுக்கு மாநில அரசும் தேர்வை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் தேர்வு எழுதிட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே ஆசிரியர்களாக தேர்வாகியிருப்பவர்கள் தேர்வு எழுதவேண்டியதில்லை என்றும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கலாம் என, தமிழக அரசு சில திருத்தங்களைக் கொண்டுவந்தது. கல்விக் கட்டணம் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியர்களின் தகுதிநிலை குறித்து கேள்விகேட்கும் அதிகாரம் பெற்றோர்களுக்கு உள்ளது.
தனியார் பள்ளிகளில், +2 முடித்தவர்களே ஆசிரியர்களாக இருந்து, ஆரம்ப வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். பள்ளிகள் அங்கீகாரம் பெறும்போது தவறான தகவலைக் கொடுத்து அங்கீகாரம் பெறுகின்றன. கல்வித் துறை அதிகாரிகள் இதைக் கண்டுகொள்வதில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது, தனியார் தேர்வுப் பயிற்சி மையங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இந்த நிலையை அரசு மாற்றி, ஒவ்வொரு மாவட்டத்தில் அரசு பயிற்சி மையங்களைத் தொடங்கிட வேண்டும்.
தற்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்திருக்கிறது. தனியார் பள்ளிகளில் குறைந்தபட்ச சம்பளத்தையும் வேலை நேரத்தையும் அரசு நிர்ணயிக்க வேண்டும்" என்றார்.
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன்
“ஏற்கெனவே ஆசிரியராகப் பணியில் இருப்பவர்களை விட்டுவிட்டு, புதியதாக பணியில் இருப்பவர்களுக்கு இந்த முறையைக் கொண்டுவரலாம். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை விட்டுவிட்டு இதர பள்ளிகளில் மட்டும் அரசு தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்கிறார்கள். அப்போது சிறுபான்மையினர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தகுதி குறைவாக இருந்தால் சரி என்று சொல்வதுபோல் இருக்கிறது.
தற்போது ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பி.எட்., ஆசிரியர் பட்டயத்தேர்வு போன்றவற்றை எல்லாம் முடித்துவிட்டுத்தான் வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கு தேர்வு நடத்தி வேலை வழங்க வேண்டும் என்கிறார்கள். `தனியார் பள்ளிகளில், அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சம்பளத்தை வழங்குவார்களா?' என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனம் குறித்தும், அவர்களின் தகுதிநிலை நிர்ணயம் குறித்தும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் தர வேண்டும்.
இந்த ஆண்டு பி.எட் படிப்பில் 17,000 இடங்களில் 9,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து பி.எட் படிப்புக்கான வாய்ப்புகளும் ஆர்வமும் குறைந்துவருகிறது. இதுதவிர, தற்போது மத்திய அரசு திறந்தநிலை கல்வி மையத்தின் மூலம் பத்தாம் வகுப்பிலும், +2 வகுப்பிலும் குறைவாக மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறது. இவை அனைத்தும் முரண்பாடுகளாகவே இருக்கின்றன.
2013-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசு முழுமையாக வேலை வழங்கியது. அதன்பிறகு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை குறைவாகவே இருந்துவருகிறது. தற்போது அரசுப் பள்ளியில் ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரப்படி பார்த்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் பெரிய அளவில் இருக்காது. ஆனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. தனியார் பள்ளிகளில் தகுந்த சம்பளத்துடன் இவர்களை நியமிக்க வேண்டும்" என்றார் சாமிநாதன்.
நாகராஜன்நெட் செட் அசோஷியேஷன் சங்கப் பொதுச்செயலாளர் நாகராஜன்,
“அரசு தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் 2019-ம் ஆண்டுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனச் சொல்வது நியாயமானது அல்ல.
அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும்போது சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்களிப்பதும் தவறு. தேசிய தகுதித்தேர்வு (National Elegibility Test) முறையான கால இடைவெளியில் நடைபெறுவதைப்போலவே, ஆசிரியர் தகுதித்தேர்வும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் பள்ளியில் உள்கட்டமைப்பை மட்டுமே பார்த்து அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படுகிறது. இனி ஆசிரியர்களின் தகுதி நிலையையும் பார்த்த பிறகு அங்கீகாரமும் அனுமதியும் வழங்க வேண்டும். இதை கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்கிறார் நாகராஜன்.
அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் தகுதியைப் பார்ப்பது நல்ல விஷயமே! அதைப்போலவே அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டியதும் அரசின் கடமை!