அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்களுக்கு பணி ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 வணிகவரி உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுக்கு வருவாய் ஈட்டித்தருவதில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வணிகவரி உதவி ஆணையர் பணியானது, வணிகர்கள் செலுத்தும் மாதாந்திர கணக்குகளை சரிபார்த்தல், வரி ஏய்ப்பை தடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. மாவட்ட பதிவாளர் பணி நில ஆவணங்களை பதிவு செய்தல், நிலத்துக்கான விலையை மதிப்பீடு செய்தல், வில்லங்க சான்று வழங்கல், பதிவு ஆவணங்களை பராமரித்தல், திருமண பதிவு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிகள் தொய்வின்றி நடக்க, காலிப்பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தவகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 21 வணிகவரித் துறை உதவி ஆணையர், 8 மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும்அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வணிகவரித்துறை செயலர் ச.சந்திரமவுலி, பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.