குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக அரசு உத்தரவுப்படி, மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) ஆகியன இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தனி பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி திட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அல்லது மீன் துறை அலுவலகங்களிலிருந்து நேரில் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய சான்றாவணங்களை இணைத்து, தொடர்புடைய மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக அக். 23-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு நாகை மீன்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை 04365-253009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.