'மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்'
''போட்டி தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஈரோடு வந்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளிக்கல்வித் துறை பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறது. மத்திய அரசின், 'அடல் லேப்' திட்டம், தமிழகத்தில், 12 இடங்களில் துவங்க, தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு, நிதி உதவி அளிக்கும்.
மத்திய அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளை, தமிழக மாணவ - மாணவியர் எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும், 450 பயிற்சி மையங்கள், டிசம்பர் இறுதிக்குள் துவங்கப்படும்.
இப்பயிற்சிக்கு, பள்ளிக் கல்வித் துறை மூலம், 'வெப்சைட்' உருவாக்கப்பட்டுள்ளது. அதில், மாணவ - மாணவியர் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
பயிற்சி எந்த நேரத்தில் நடக்கும் என்பது தெரிவிக்கப்படும். 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், சிறப்பான பயிற்சி அளிக்கப்படும்.
தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பொதுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில், சிறந்து விளங்கும் தனியார் நிறுவனத்துடன், செவ்வாயன்று, ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்நிறுவனம், ஓராண்டு வரை, இலவசமாக பயிற்சி அளிக்கும்.
ஐ.ஏ.எஸ்., போட்டி தேர்வை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும், மாவட்ட நுாலகம் சார்பில், பயிற்சி மையம் துவங்கப்படும்.
ஈரோடு மாவட்டம், அரச்சலுாரில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம், அரசின் கவனத்துக்கு வரவில்லை. கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வர். அதன் பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வரும் விவகாரத்தில், தமிழக அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.