தாமதமாகும் உள்ளாட்சித் தேர்தல்: மறுக்கப்படும் ரூ.4,000 கோடி!!!
தமிழகத்தில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் 2016ஆம் ஆண்டுஅக்டோபரோடு முடிந்துவிட்ட நிலையில் கடந்த ஒரு வருடமாகத் தேர்தல் நடப்பது பல்வேறு காரணங்களால் தடைபட்டு வருகிறது. வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத் தேர்தல் ஆணையமோ இதுகுறித்து நீதிமன்றத்திடமே விளக்கம் கோரியுள்ளது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய 4,000 கோடி ரூபாய் நிதியைத் தர மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் அரசாங்கம் என அழைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கிக் கிடக்கின்றன.
இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவ. இளங்கோ.
“மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் நிதி அளித்து வருகிறது. 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி மற்றும் 12,528 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 4,000 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு இவ்வருடம் மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால் மத்திய அரசு இத்தொகையை தர மறுக்கிறது. பலமுறை டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வரும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த நிதியை பெற எந்த கோரிக்கையும் வைக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.
இந்நிதியின் மூலம் கோவை மாநகராட்சிக்குக் கிடைக்க வேண்டிய 60 கோடி ரூபாய் கிடைக்காததினால் 500 துப்பரவுப் பணியாளர்களுக்குச் சம்பளம் தர முடியாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் தேர்தலை எதிர்நோக்கி பல இடங்களில் அளவுக்கு மீறி பணம் செலவழிக்கப்பட்டதால் தற்போது ஊழியர்களின் சம்பளத்துக்கே திண்டாட வேண்டியுள்ள நிலை நிலவுகிறது. அதிகபட்சமாகச் சென்னை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, மத்தியத் தணிக்கைக் குழு சமீபத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை மாநகராட்சி - சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத காரணத்தால் ரூ.2,000 கோடி (17 வருடங்களுக்கு) வரை சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது” என்ற சிவ.இளங்கோ உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் சுகாதார நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.
“சுகாதாரத்தை பேணி காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்த வேளையில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பை அள்ளுவதற்கும் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும் கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறது. தேர்தல் நடந்து உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள் இருந்திருந்தால் அடுத்தத் தேர்தலுக்கு அஞ்சி ஓரளவுக்காவது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களுக்கு கிராம மக்களோடு எந்தப் பிணைப்பும் இல்லாததால் எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2005இல் குஜராத் மாநில பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் குஜராத் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நடந்த வழக்கில், தேர்தலை எக்காரணத்துக்காகவும் (delimitation பிரச்னை உட்பட) தள்ளிவைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 73ஆவது அரசியல் சாசன திருத்தத்தின்படி கட்டாயமாக ஐந்து வருடத்துக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும், வருடத்துக்கு நான்கு முறை கட்டாயமாகக் கிராமசபை கூட வேண்டும். தமிழகத்தில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கட்டாய கிராமசபைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால் கிராமசபைகள் முறையாக நடைபெறுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீர்மானம் எழுதப்படாமல் கையெழுத்து வாங்குவது, முன்னதாகவே (Template தீர்மானங்கள்) தீர்மானங்களை எழுதி கையெழுத்து மட்டும் வாங்குவது, கோரம் (Quorum) இல்லை என்றாலும் அதாவது போதுமான மக்கள் கலந்துகொள்ளவிட்டாலும் பொய் கையெழுத்துப் போட்டு கிராமசபைகளை முடிப்பது, தீர்மான நகல்களை வழங்காமல் இழுத்தடிப்பது என்று ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. எனவே உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் சிவ.இளங்கோ.
தமிழகம் ரூ.4 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், இந்த 4000 கோடி ரூபாயைத் தமிழக அரசு முறையாகப் பெற, உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா?