₹437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: செங்கோட்டையன் உறுதி
கோபியில் நேற்று நடந்த ஒரு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
கோபியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் 32 மாவட்ட தலைநகரங்களிலும், அரசின் சார்பில் ₹2 கோடியே 17 லட்சம் செலவில் உயர் கல்வி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும். பாடத்திட்ட மாற்றத்தினால், பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் கிடைக்கும். 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். ₹437 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
இந்த பயிற்சி மையத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின் பயிற்சி பெறுபவர்கள் தேவையான பயிற்சியை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கல்வி மாற்றத்தினால், பிற மாநிலங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் தமிழகத்திற்கு கல்வி கற்க வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தஅமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, கற்கும் பாரத திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வரவில்லை என்பது எனது பார்வைக்கு இப்போதுதான் வந்துள்ளது. உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்