தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ, 'சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீர், காற்றிலுள்ள ஆக்சிஜன், ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்பம் அதிகரிக்கிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தார். இதுபோல் திருப்புவனம் கருப்புராஜா, மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் மனு செய்திருந்தனர்.
உயர்நீதிமன்ற கிளைக்குட்பட்ட மாவட்டங்களில் 10 நாட்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஜன.,31ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.
நீதிபதி செல்வம்: உயர்நீதிமன்றக் கிளை அருகிலுள்ள பகுதியில்கூட சீமைக் கருவேல மரங்களை
அகற்றவில்லையே?
அரசு வழக்கறிஞர்: சில பகுதிகளில் 30 முதல் 40 சதவீதம், சில பகுதிகளில் முற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி செல்வம்: கலிங்கப்பட்டி யில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் நீங்கள் ஈடுபட்ட செய்தியை பார்த்தோம். பிற பகுதிகளில், இப்பணியில் உங்கள் தொண்டர்களை ஈடுபடுத்தலாமே?
வைகோ: அரசியலுக்கு அப்பாற்பட்டு, அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறேன். பள்ளி,
கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நோட்டீஸ் அச்சடித்து வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாளை 2 கிராமங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவோம்.
நீதிபதி செல்வம்: பாராட்டுக்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் உத்தரவு: மற்ற 19 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என வைகோ தாக்கல் செய்த கூடுதல் மனு விசாரணைக்கு ஏற்கப் படுகிறது. எனவே, தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் 15 நாட்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முதன்மை நீதிபதிகள், முன்சீப்கள், வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிப்.,27 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வைகோவிற்கு அனுமதி: வழக்கில் அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணி, நெடுஞ்சாலை, அறநிலையத்துறை, மின்வாரியம், துறைமுகம், மத்திய பொதுப்பணித்துறை, தெற்கு ரயில்வே, விமான நிலையம் உட்பட பல்வேறு மத்திய, மாநில அரசுத்துறைகளை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள மனு செய்ய வைகோவிற்கு அனுமதியளிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இம்மரங்களை அகற்ற போதிய நிதி இல்லை என கலெக்டர்
தெரிவித்துள்ளார். அம்மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், ஆய்வு செய்யும் வழக்கறிஞர் கமிஷனர்களுக்கு
ஒத்துழைப்பு அளிக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
கலெக்டர் உத்தரவாதம்: சீமைக் கருவேல மரங்களை அகற்ற போதிய ஆர்வம் செலுத்தவில்லை எனக்கூறி, நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த அவமதிப்பு வழக்கில் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆஜரானார். அவர்,'ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களில் சீமைக் கருவேல மரங்கள்
அகற்றப்படும்,' என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதிகள், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.