அறிவுக்கூர்மையில் அறிவியல் அறிஞர்,ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி...
ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.
இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார்.
கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் பதினோரு வயதே ஆகும் ஹரிப்பிரியாவை பிபிசி தமிழ் நேர்காணல் செய்தது.
'அரிய சாதனை'
ஒருவரது அறிவுக்கூர்மையை அளவிடுவதற்கு பல்வேறு விதமான சோதனைகள்/ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது நாடுக்கு நாடு அல்லது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. இங்கு அறிவுக்கூர்மை என்பது ஒரு விடயத்தை எவ்வளவு விரைவாக உள்வாங்கிக் கொள்வது என்பது மட்டுமின்றி, சிக்கல்களை தீர்ப்பதில் மூளையின் செயல்பாட்டு திறனை அடிப்படையாக கொண்டுள்ளது.
அதன்படி, உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் பிரிட்டிஷ் மென்சாவின், 'காட்டல் III பி (Cattell III B)' எனும் தேர்வில் பங்கேற்ற பிரிட்டன்வாழ் தமிழ்ச் சிறுமியான ஹரிப்பிரியா, அத்தேர்வின் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 பெற்று சாதனைப் படைத்துள்ளார். அதாவது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இவர் இரண்டு எண்கள் அதிகமாக பெற்றுள்ளார். அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான 'கல்ச்ர் பார் (Culture Fair Scale)' என்பதிலும் அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார்.
கடந்த 25ஆம் தேதி வெளியான இந்த முடிவு குறித்து, "எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது அறிவுக்கூர்மையை பயன்படுத்தி எதிர்காலத்தில் நல்ல பல விடயங்களை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறேன். பிபிசியின் ஒரு தொலைக்காட்சி நிகழ்த்தியில் பங்கேற்பதற்காகவே எனது அறிவுக்கூர்மையை பரிசோதிப்பதற்கு திட்டமிட்டோம். அதன்படி, முதல் முறையாக கடந்த மே மாதத்தில் இதே தேர்வுகளை எவ்வித பயிற்சியுமின்றி தேர்வை எழுதியபோது, ஆச்சர்யமளிக்கும் வகையில், 160 மதிப்பீட்டை பெற்றேன்.
அதையடுத்து, இன்னும் திட்டமிட்டு முயற்சித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியுமென்று பெற்றோர்கள் ஊக்கமளித்தனர். எனவே, அவ்வப்போது கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கடந்த வாரம் இரண்டாவது முறையாக எழுதிய தேர்வில்தான் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளேன்" என்று ஹரிப்பிரியா விளக்குகிறார்.
அறிவுக்கூர்மை தேர்வு எதற்காக?
"அதிவிரைவாக விடயங்களை கற்றுக்கொள்வது, வழக்கத்திற்கு மாறாக பெரிய சொற்களஞ்சிய அறிவை கொண்டிருத்தல், படைப்புத்திறன், தலைமைப்பண்பு, சிக்கலை தீர்க்கும் திறன் உள்ளிட்டவைகளில் சிலவற்றையோ, பலவற்றையோ கொண்டிருக்கும் குழந்தைகள் அசாத்திய திறமையை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்" என்று கூறுகிறது மென்சாவின் விளக்கக் குறிப்பு.
..................................