அரசு பள்ளிக்கு, 'ஸ்மார்ட் வகுப்பறை!' முன்னாள் மாணவர்கள் அசத்தல்
கருமத்தம்பட்டி: கோவை சோமனுார் அருகிலுள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து, 'ஸ்மார்ட் வகுப்பறை'க்கான தரைத்தளம் அமைத்துத் தருகின்றனர். இது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
சோமனுார் அருகில் உள்ளது கரவளி மாதப்பூர் ஊராட்சி. இதற்குட்பட்ட தொட்டிபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றுள்ளது. இதில், மாதப்பூர், தொட்டிபாளையம், ராமாச்சியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார், 160 மாணவர்கள் படிக்கின்றனர்.இந்தப் பள்ளியில், சுவரெல்லாம் சித்திரங்கள் வரையப்பட்ட வகுப்பறையின் தரைத்தளம் ஒன்று சிதிலமாகிக் கிடந்தது. அது முதல் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான வகுப்பறையாகும். அதைச் சீரமைக்க வேண்டுமென தொட்டிபாளையம் மற்றும் ராமாச்சியம்பாளையத்தை சேர்ந்த, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர்.
தற்போது, பள்ளியின் அரையாண்டு விடுமுறை என்பதால், அந்த குறிப்பிட்ட வகுப்பறையில் சிதிலமான தரைத்தளத்தை அகற்றிவிட்டு, நவீன 'டைல்ஸ்' கற்களைக்கொண்டு பளபளப்பாக இருக்கும் வகையில் சீர்செய்து வருகின்றனர்.சுமார் 55 ஆயிரம் செலவில் இந்தப் பணிகளை முன்னாள் மாணவர்கள் மேற்கொண்டு வருவதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களும், கிராமத்தின் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே இந்தப் பள்ளியில், சோமனுார் லயன்ஸ் சங்கத்தின் சார்பில், சில மாதங்கள் முன்னர் பள்ளிச் சுவர்களுக்கு பெயின்ட் அடித்தல், நுழைவாயிலில் கிரில் கேட் அமைத்தல், பீரோ, நோட்டுபுத்தகங்கள் என்று சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.