உ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி
லக்னோ:உ.பி.,மாநில காவல்துறையில் 62 பியூன் காலி இடத்திற்கு 81 ஆயிரம் பட்டதாரிகள் போட்டியிட்டுள்ளனர்.
இது குறித்து மாநில காவல் துறை தெரிவித்திருப்பதாவது:
உ.பி., மாநில காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டது. காலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும், குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இதனையடுத்து காவல் துறைக்கு 81 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தது. இதில் பட்டதாரிகள் 50 ஆயிரம் பேர், முதுகலை பட்டதாரிகள் 28 ஆயிரம் பேரும், பிஎச்டி படித்தவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் என 81 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பியூன் வேலைக்கு குறைந்த பட்ச தகுதி 5-ம் வகுப்பு என்று இருந்தபோதிலும் எதிர்பாராத வகையில் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பதால் தற்காலிகமாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் யோகிநாத் தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமஜ்வாடி கட்சியின் செய்திதொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி கூறுகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லை என்று கூறி இருப்பது இளைஞர்களை அவமானப் படுத்துவது போன்று உள்ளதாகவும்., உண்மையில் இளைஞர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர். ஆனால் அரசு அவர்களுக்கான வேலையை வழங்க வில்லை என கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பா.ஜ., முந்தைய ஆட்சிகளில் பண மற்றும் சாதி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.தற்போது பா.ஜ., ஆட்சியில் பணியமர்த்தலில் முழு வெளிப்படைத் தன்மை உள்ளது என தெரிவித்துள்ளது.