வாட்ஸ் அப்பில் இனி ரிப்ளை செய்வது ஈஸி!
மெசெஞ்சிங் சேவையில் முக்கிய செயலிகளுள் ஒன்றான வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் வாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டு பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் தனது அடுத்த அப்டேட்டில் Dark Mode, ‘Swipe To Reply’ அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. Dark Mode வசதியில் வாட்ஸ் அப் செயலியின் நிறம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இருட்டின் பின்னணியில் தெளிவான எழுத்துக்களைக் கொண்டு படிப்பவர்களுக்கு புதியதோர் அனுபவத்தை வழங்கும். ட்விட்டரில் இந்தச் சேவை முன்பே அறிமுகமாகிவிட்ட நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.
மற்றொரு வசதியான ‘Swipe To Reply’ முன்பே iOS பயனர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஆண்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப்பில் ரிப்ளை செய்யும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனர்களைக் கொண்டு மெசெஞ்சிங் சேவையில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.