வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி
சென்னை: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' முறையில், வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதில், மாணவர்களின் எழுத்து திறன், வாசித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படு கின்றன. 2017 - 18ம் கல்வி ஆண்டில், கற்றல் அடைவு திறன் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு, வாசித்தல் பழக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது.எனவே, இந்த மாதம் முதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வாசிப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களின்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போரை, நன்றாக வாசிப்பவர்கள், நிறுத்தி வாசிப்பவர்கள், வாசிக்க திணறுபவர்கள் என, தரம் பிரித்து, இந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்