புதிய ஊதியப்படி பி.எப்., சந்தா..
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள அடிப்படையில், பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான, மாதாந்திர சந்தா பிடிக்க, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, 2009ல், ஊதியம் உயர்த்தப்பட்டது.
அதன் அடிப்படையில், பி.எப்., மாதாந்திர சந்தாவாக, சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு, 'அலுவலர் குழு - 2017' பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய ஊதியத்தில் அடிப்படை ஊதியம், சிறப்பு ஊதியம், தனி ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்த தொகையில், 12 சதவீதத்தை, வருங்கால வைப்பு நிதியின் மாதாந்திர சந்தாவாக, தொடர்ந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
மேலும், பொது வருங்கால வைப்பு நிதியில், 12 சதவீதத்திற்கும் மேலாக, மாதச்சந்தா செலுத்திட, தடையேதுமில்லை என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.