பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி....
பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் விபரம்: பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம்.
பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம் போன்றவை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும்.
விழா ஏற்பாட்டில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பொறுப்பில் உள்ள கட்சியினர், முக்கிய விருந்தினராக பங்கேற்கலாம். மாணவர்களின் பெற்றோரையும், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவழைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.