ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ஏ.ஐ.சி.டி.இ., ஆய்வுக்குழு அறிவுறுத்தல்
தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது. ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த, துறை ரீதியாக குழுக்கள் அமைத்து, கருத்து கேட்கப்படுகிறது. இன்ஜி., கல்லுாரிகளிடம் ஆலோசனை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. நேற்று, சென்னையில், ஏ.ஐ.சி.டி.இ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மண்டல அதிகாரி பாலமுருகன் ஏற்பாட்டில், ஊதியக் குழு ஆய்வு கமிட்டி தலைவரும், கர்நாடகா விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலை துணை வேந்தருமான ராஜசேகரய்யா தலைமை வகித்தார்.
குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ஏ.ஐ.சி.டி.இ. உறுப்பினர் செயலருமான ஏ.பி.மிட்டல், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலை துணை வேந்தர் ஐசக், அண்ணா பல்கலை சார்பில், பேராசிரியர் வெங்கடேசன், தமிழ்நாடு தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், அதன் செயலர், திருச்சி ஷிவானி கல்லுாரிகள் தலைவர் செல்வராஜ், ஜெயா கல்வி குழும தலைவர் கனகராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்த, ஏ.ஐ.சி.டி.இ., குழுவினர் அறிவுறுத்தினர். அப்போது, கல்லுாரிகள் சந்திக்கும், பல்வேறு பிரச்னைகள் பற்றி, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாணவர் - ஆசிரியர் விகிதத்தை, 1:15ல் இருந்து, 1:20 ஆக மாற்ற வேண்டும்; பேராசிரியர்களை பதவி உயர்த்துவதற்கான, சி.ஏ.எஸ்., திட்ட குறைகளை தீர்க்க வேண்டும்; எம்.இ., முடித்தவர்களை, உதவி பேராசிரியராக பணியில் சேர்த்தல்.
உதவி பேராசிரியருக்கு, பிஎச்.டி., கட்டாயம் என்ற அம்சத்திலிருந்து விலக்கு அளித்தல்; ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கைப்படி, தமிழக கல்லுாரிகளில் கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் போன்றவை குறித்து, கருத்துகள் தெரிவித்தனர்.
அடுத்த ஆலோசனை கூட்டம், ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. சென்னையில் உள்ள தென்மண்டல, ஏ.ஐ.சி.டி.இ., மண்டல அதிகாரி பாலமுருகன், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.