சனி, 1 ஜூலை, 2017
ஆசிரியர் அமைப்புகளை தமிழக அரசே நினைத் தாலும் தடைசெய்ய முடியாது ; கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை !!!
மீண்டும் ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது. இம்முறை பள்ளிக் கல்விக் குறைபாடுகளைக் களையும் பொருட்டு அரசிடம் 20 கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார். வழக்கு மறுபடியும் விசாரணைக்கு ஜுலை 14 அன்று வரவுள்ளது. அதற்குள் அரசு தனது பதில்களை அளிக்குமா அல்லது வழக்கு மறுபடியும் தள்ளிப்போடப்படுமா என்பது தெரியாது. மேலும், ஜுலை 3 முதல் நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய
வழக்குகளின் பட்டியல் மாறிவிடும் என்பதனால் அவரே இவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துவாரா என்றும் தெரியவில்லை.
வழக்குகளின் பட்டியல் மாறிவிடும் என்பதனால் அவரே இவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துவாரா என்றும் தெரியவில்லை.
பள்ளிக் கல்வித் துறையிலுள்ள சீர்கேடுகளைக் களைந்து மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் யாருக்கு இருப்பதற்கில்லை. ஆனால், கல்வி உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை அழுக்குகளையும் வெளுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான் என்று கருதுவது சரியல்ல. அதேபோல், ஆசிரியர்களுடைய அமைப்புகளினால்தான் சீர்கேடுகளைக் களைய முடியவில்லை என்று எண்ணுவதும் சரியல்ல.

கவலை தரும் கேள்வி
ஆசிரியர் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமா என்று நீதியரசர் அரசை கேட்டுள்ள கேள்வி, ஆசிரியர் அமைப்பு களுடன் கடந்த 50 வருடங்களாகச் செயல்பட்டுவரும் என்னைக் கவலை கொள்ளவைக்கிறது. நீதிபதி எழுப்பியுள்ள 20 கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசைச் சார்ந்தது என்றாலும் அவர் எழுப்பிய 19-வது கேள்வி ஆசிரியர் அமைப்புகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியதால் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது அவசியமாகிறது.
நீதிபதி தனது உத்தரவில் எழுப்பியுள்ள கேள்வி இதுதான்: “காவலர்களைப்போல அரசு ஆசிரியர்கள் சங்கங்களையோ அல்லது அமைப்புகளையோ தொடங்குவதை ஏன் தடைசெய்யக் கூடாது? ஏனென்றால் தவறு செய்யக்கூடிய ஆசிரியர்கள் தங்களுடைய அமைப்புகள் / சங்கங்கள் மூலம் அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதுடன் கல்வி கற்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதாலும், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது ஆசிரியர்கள்தான் என்பதாலும் இத்தேவை எழுகிறது.”
ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்பதும், பள்ளிக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அப்பள்ளிக் கல்வி சீரழிந்துவருவதற்கும், கல்வியின் தரம் குறைந்து வருவதற்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது சரியல்ல. இது பிரச்சினைக்குத் தீர்வு காண உதவாது. மேலும் இக்கேள்விக்கான பதிலை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதும் தவறு. எந்த அரசானாலும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட முடியாது. இந்தக் கேள்விக்கான விடை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து அதைப் பரிசீலித்த பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்தும் பெற முடியும்.
நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டதுபோல் அரசமைப்புச் சட்டத்தின் 21-ஏ என்ற பிரிவில் இந்தியாவிலுள்ள 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் 2002-ல் கொண்டுவரப்பட்டது. ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே 1950 ஜனவரி 26 முதலாகப் பல உரிமைகள் அடிப்படை உரிமைகளாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 19-வது பிரிவில் சங்கம் அமைக்கும் உரிமையும், அமைதியாக கூடுவதற்கான உரிமையும், பேச்சுரிமையும், கருத்துரிமையும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில் ராணுவ வீரர்களுக்கும், பொது அமைதியை நிலைநாட்ட விழையும் படைகளுக்கும் இப்படிப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தி அவர்கள் உரிய கடமைகளைப் பணியாற்றும் வண்ணமும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று அதிகாரம் வழங்கியுள்ளது.
இப்பிரிவைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் 1966-ம் வருடம் காவல் படையினர் (உரிமைகளைக் கட்டுப்படுத்தும்) சட்டத்தை உருவாக்கியது. 1984-ல் இச்சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, “காவலர் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் கிட்டாது” என்று கூறப்பட்டுள்ளது. அதனால் காவலர்கள் சங்கம் அமைப்பது (அ) கூட்டமாகக் கூடி தீர்மானங்கள் இயற்றுவது சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. டெல்லி காவலர் சங்கம் போட்ட வழக்கில் இச்சட்டப் பிரிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது (1987). வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியின்போது காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்கியுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பியும் அரசு இதற்கு இசையவில்லை. பாதிக்கப்பட்ட காவலர்கள் போட்ட வழக்குகளையும் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்துவிட்டது.
சங்கம் அமைக்கும் உரிமை
காவல் படையினரைத் தவிர மற்ற பகுதியினர் சங்கம் அமைக்கும் உரிமையை யாரும் தடைசெய்ய முடியாது. 1926-ம் வருடத்திய தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களும் தங்களுக்கான தொழிற்சங்கங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆசிரியர்கள் தொழிலாளர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்பதனால் அவர்கள் தங்களது அமைப்புகளைத் தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்திருக்கின்றனர். இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஒழுங்கு விதிமுறையின் கீழ் தங்களது அமைப்புகளை உரிய முறையில் பதிவுசெய்திருக்கின்றனர். ஆசிரியர் பணிகளை அங்கீகரிப்பதுடன் அவர்களுடைய ஆலோசனையைப் பெறும் வகையில் மாநிலங்களிலுள்ள சட்ட மேலவையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவமும் அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது - பிரிவு 171(3) (சி). தமிழ்நாடு சட்ட மேலவையில் - அது உயிருடன் இருந்தவரை - அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் சிறப்பாகப் பணியாற்றியதை மறக்க முடியாது (மாயவன், பார்த்தசாரதி).
ஒருவர் அரசுப் பணியில் இருக்கும்போது அங்குள்ள ஊழியர் அமைப்புகளிலும் பொறுப்புகளில் இருந்துகொண்டு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? அதைப் பற்றி அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? இந்தக் கேள்வி பல முறை நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டியுள்ளது. 1964-ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளடங்கிய அமர்வு வழங்கிய ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்பு “அரசு ஊழியர்களாக இருப்பினும் அவர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியிலுள்ள அடிப்படை உரிமைகள் பொருந்தும்; அவர்கள் சங்கம் அமைத்துக்கொள்வதோடு தங்களது உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் தவிர்த்த மற்ற போராட்டங்களில் ஈடுபடலாம்” என்றும் தெளிவாக வழிகாட்டியது. இதைத் தொடர்ந்து, 1966-ல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தொடர்ந்த ஒரு வழக்கில் சங்கம் அமைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இப்படிப்பட்ட பின்னணியில் சென்னை உயர் நீதிமன்றம் இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி வருத்தத்தைத் தருகிறது. சங்கம் என்பது ஜனநாயகத்தின் ஒரு வடிவம். ஏற்கெனவே அரசானது சங்கங்களை நசுக்கத் தருணம் பார்த்திருக்கும் நிலையில், இப்படியான கேள்வி எவ்விதத்தில் நியாயமாகும்? மேலும், காவல் பணியாற்றுவோருடன் ஆசிரியர்கள் போன்ற தரப்பினரை ஒப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானதாக அமைந்துவிடாதா? நீதிபதியின் 19-வது கேள்விக்கான பதில் இதுதான்.
1.ஆசிரியர்களுக்கும் காவல் துறை பணியாற்றுபவர் களுக்கும் உள்ள உரிமைகள் வெவ்வேறு. 2. ஆசிரியர் அமைப்புகளை தமிழக அரசே நினைத் தாலும் தடைசெய்ய முடியாது. 3. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டிய சமுதாயக் கடமையில் ஆசிரியர்களுக்கும், அவர்களது அமைப்புகளுக்கும் பெரும் பங்குண்டு. ஆகையால், இந்தக் கேள்வியை நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு , ஏப்ரல் 29,30 தேதியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு !!
Teachers Recruitment Board College Road, Chennai-600006
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
EXAMINATION RESULTS
Dated: 30-06-2017
வெள்ளி, 30 ஜூன், 2017
நீட் சட்டம், தமிழக அரசுக்கு எதிராக பிரின்ஸ் கஜேந்திரபாபு பரபரப்பு நோட்டீஸ்
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், ப்ளஸ் டூ வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழக சுகாதாரத் துறைக்கு எதிராக ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், நீட் தொடர்பான தமிழக அரசின் சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்துப் போடும் வரை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சுகாதாரத்துறைக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.
400 மாணவ மாணவிகளின் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரி... குவியும் பாராட்டுக்கள்.....
சென்னை: 400 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னையை அடுத்த கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பலர், பள்ளிக்குச் செல்லாமல், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இதையறிந்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேல், மாணவர்களுக்கு, முறையான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். கல்வியின் மூலமாக, அவர்களின் குற்ற ஆர்வத்தை தடுக்கலாம் என்றும் தீர்மானித்த அவர், கண்ணகி நகர், எழில் நகர் போன்ற இடங்களில் வசிக்கும் அடிப்படை வசதியற்ற, பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களின் விவரத்தை சேகரித்தார்.
இதன்படி, சுமார் 412 மாணவர்கள், பள்ளிகளில் இருந்து இடைநின்றது தெரியவந்தது. 18 வயதுக்கு மிகாமல் உள்ள இந்த மாணவர்கள் அனைவரையும் பெரும் முயற்சி எடுத்து, சக போலீஸ் அதிகாரிகளின் பங்களிப்பில் அத்தியாவசிய செலவுகளை செய்து, பள்ளியில் சேர்த்துள்ளார் சுந்தரவடிவேல்.
இந்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு, நல்ல வழியை காட்ட, கடந்த 8 மாதங்களாக பெரும் முயற்சி எடுத்து, தற்போது அதனை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டப் பணிக்காக, தன்னோடு உதவிக்கு நின்ற இளம் போலீஸ் அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இனி வாட்ஸ்அப் மூலமே மெயில் அனுப்பலாம்: இது லேட்டஸ்ட் அப்டேட்!
இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
வாட்ஸ்அப்-இல் எந்த மாதிரியான எமோஜி வேண்டுமோ அதனை டைப் செய்தால் அந்த எமோஜி தோன்றும். அதாவது, ஃபோன் என்ற எமோஜி வேண்டுமேனில், ஃபோன் (Phone) என்று டைப் செய்தால் நமக்கு போன் வகைகள் தோன்றும், அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதி பீட்டா (beta) 2.17.238 வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அனைத்து வெர்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக, வாட்ஸ்அப்-இல் எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்
1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
கனிவுடன் கோரிக்கையை கேட்ட செயலர் அவர்கள் இது குறித்து நல்லதொரு அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வில் பிற ஆசிரியர்களுடன் உள்ள ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவம் நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்...இவண் *ஆசிரியர்களில் கடைக் கோடியில் தனித்து விடப்பட்ட 1997 முதல் 2002 வரை பணியேற்ற ஆசிரியன்
விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்...
விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இதில், பிளஸ் 2வுக்கு, 5,000 பேரும், 10ம் வகுப்பில், 2,000 பேரும், பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு சென்னையில் நடந்தது. இதன் முடிவில், பிளஸ் 2வில், 2,070 பேருக்கும், 10ம் வகுப்பில், 821 பேருக்கும், பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின், அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, திருத்திய விடைத்தாள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விடை திருத்தத்தில் குளறுபடி செய்த விடை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையிடுவோர், மதிப்பெண் கண்காணிப்பாளர் என, 3,000பேரின் பட்டியல் தயாராகி உள்ளது. இவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பள்ளிக்கல்வி செயலக உத்தரவின் பேரில், ஆசிரியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது.தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும். தேர்வர்கள் தங்களுடன் கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டி கார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வேறு எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும்.
மேலும் பிற சேர்க்கைப்படிவம் 8-ல் உள்ள படிவத்தினை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









