மாணவிகளுடன் அன்பாசிரியர் லோகநாதன்சிறந்த ஆசிரியர் இருதயத்தின் வழியாய்ப் பாடம் நடத்துகிறார்; இயந்திரத்தின் வழியல்ல.
மாற்றுத்திறனாளி என்பவர் மனதளவில் ஊனமாக இல்லாமல் இருந்தால் போதும். மலையைக்கூட நகர்த்தலாம் என்று தன்னம்பிக்கை கீற்று விதைக்கிறார் அன்பாசிரியர் லோகநாதன். ஆசிரியப் பணி, மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகள், தன்னம்பிக்கை விருதுகள், தமிழ் விக்கிபீடியா பணி, அறக்கட்டளை வேலைகள், கல்வி சார்ந்த பயிற்சிகள் என்று சுழன்றுகொண்டே இருக்கிறார்.
அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியர் தொடரில்...
''நான் படித்த மாற்றுத்திறனாளிகள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். எங்களுக்கு ஏற்பட்ட சிரமம் அடுத்து வரும் தலைமுறைக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் ஆசிரியப் பணிக்கு வர முடிவெடுத்தேன்.
கும்பகோணம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து படித்து, 2008-ல் வேலைக்கு சேர்ந்தேன். மூலனூர் அருகே, பட்டுத்துறை என்ற கிராமத்து நடுநிலைப் பள்ளியில் பணி கிடைத்தது. எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகிய செயல்முறைகளைப் பின்பற்றினேன். பாடங்கள் எடுப்பதோடு, கலை, கைவினை மற்றும் தொழிற்கல்விகளையும் கற்பித்தேன்.
சொந்த ஊரான ஈரோட்டில் இருந்து பள்ளி வெகு தொலைவில் இருந்ததால் சிரமப்பட்ட எனக்கு, இரண்டே மாதங்களில் மாற்றல் கிடைத்தது. ஆனால் கிராம மக்கள் என்னைப் போக அனுமதிக்கவே இல்லை. உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அரை மனதுடன் அனுப்பி வைத்தனர்.
அதே ஆண்டில் ஈரோடு, காவேரி வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணியைத் தொடங்கினேன். அங்கே பாடங்களை பாடல்கள், கதை, கவிதை, விடுகதை வழியாகக் கற்பித்தேன். பாடத்தை நடத்தும் முன், மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பேசியபிறகே பாடம் எடுக்கிறேன். கணிதப் பாடத்துக்கு ஆணிமணிச் சட்டங்கள், கூட்டல், கழித்தல் பலகைகளைப் பயன்படுத்துகிறேன். இதனால் மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்கின்றனர்.
சேவை உண்டியல்வகுப்பறையில் 'சேவை உண்டியல்' ஒன்றை வைத்திருக்கிறோம். விருப்பமும், வசதியும் கொண்டவர்கள் இதில் இந்த ஜூன் மாதம் முதல் அடுத்த ஜூன் வரை காசு போடலாம். அடுத்த ஜூனில் உண்டியலைத் திறந்து அதிலுள்ள தொகையை மாற்றுத்திறனாளிகள் மையம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடையாக அளிக்கிறோம்.
வகுப்பறை நூலகம்வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளை நானே கற்றுக்கொடுக்கிறேன். வகுப்பறையிலேயே நூலகம் அமைத்திருக்கிறோம். மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒரு கதை புத்தகத்தைக் கொண்டு வருவார்கள். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, நூலகத்தில் வைக்கப்படும். அத்துடன் ஊரில் இருக்கும் நூலகத்தில் மாணவர்களை உறுப்பினராக்கி விடுவதால், போட்டிகளின்போது யாரையும் சார்ந்திருக்காமல் மாணவர்களே தங்களைத் தயாரித்துக் கொள்கின்றனர்.
கணிதப் பாடத்துக்கு அரசு வழங்கியுள்ள உபகரணங்கள் அடங்கிய கணிதப் பெட்டியைப் பயன்படுத்துகிறோம். அறிவியலுக்குப் பரிசோதனைப் பெட்டி. இதில் நானே வடிவமைத்த சோதனைப் பொருள்கள் இருக்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களின் வலிஎனக்குத் தெரியும் என்பதால், அவர்கள் மீது கூடுதல் கவனம் வைத்துப் பாடம் கற்பிக்கிறேன்.
ஆதரவற்ற மாணவர்களுக்கு வழிகாட்டல்
2015-ம் ஆண்டு 32 நாடுகள் பங்குபெறும் 'டிசைன் ஃபார் சேஞ்ச்' போட்டிக்கு ஈரோட்டில் இருந்து நான் தேர்வானேன். அதில் அம்மாவோ, அப்பாவோ அல்லது இருவருமோ இல்லாமல் நிராதரவாக இருக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று தோன்றியது. போட்டிக்காக, 'பெற்றோரை இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்' எனும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். அத்தகைய குழந்தைகள் 52 பேர் எங்கள் பள்ளியில் படித்தனர். குறுகிய காலமே இருந்ததால் ஐவரின் வாழ்க்கையை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.
தினமும் வீடுகளுக்குப் பால் பாக்கெட் போட்டுவிட்டுப் பள்ளிக்கு வரும் தினேஷ் குமார், பெற்றொர் இல்லாமல் இளநீர் வெட்டும் கனகவேல், அம்மா சுடும் முறுக்குகளை விற்பனை செய்துவிட்டு வரும் ஷர்மிளா, யாழினி மற்றும் ஒரு மாணவர் என 5 பேரின் வாழ்வை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டேன். அதை வீடியோவாகப் பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டேன். அதைப் பார்த்து ஏராளமான உதவிகள் குவிந்தன.காணொலியைக் காண: வீடியோ
ஈரோடு தனியார் துணிக்கடையில் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நிலத்தை எங்கள் பள்ளிக்கு அளித்தார். அங்கே ஆசிரமமோ, மாணவர்களுக்கான விடுதியோ கட்ட முடிவு செய்துள்ளோம். அதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். முழுமையான நிதி கிடைக்காததால் பணி தொடங்கப்படவில்லை.
நம் மகன், மகளுக்காக யார் யாரோ உதவுகிறார்களே, நாம் ஏன் உதவக்கூடாது என்று சில பெற்றோர்கள் நினைத்தனர். 2016-ம் ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் 'பெற்றோராய் வழிகாட்டும்' அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன்மூலம் மாணவர்களுக்கு உடை, புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறோம். தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் என அனைத்திலும் பெற்றோர்களே பதவியில் இருக்கின்றனர். நிதியளிக்க முடியாமல் இருந்தாலும், தங்கள் உடலுழைப்பைக் கொடுக்கின்றனர்.
எதிர்காலத் தேவைகளும் திட்டங்களும்
எங்கள் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உட்கார சிறப்பு நாற்காலிகளும், விளையாட்டுப் பொருட்களும் வாங்கவேண்டும். மற்ற மாணவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் போதவில்லை. முதலுதவிப் பெட்டிகளும் தேவைப்படுகிறது. மதிப்பெண்களைத் தாண்டி தொழிற்கல்வியை மாணவர்களிடையே அறிமுகப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் தலைசிறந்த மாணாக்கர்களாக வெளியே செல்ல வேண்டும். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் நிலை மாறவேண்டும்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அதைப்பற்றி என்றுமே நான் யோசித்ததில்லை. தன்னம்பிக்கையுடன் இருப்பதையே என்னுடைய பலமாகக் கருதுகிறேன். இவை அனைத்தும் காரணமான என் பெற்றோர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் லோகநாதன்.