உணவு பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்ததால், அதிகாரிகள், ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக ரேஷன் கடைகளில், 1.91 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நேற்று முதல் அமல்படுத்தியது.
அதன்படி, நான்கு பேருக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு, தற்போது ரேஷனில் வழங்கப்படும் அதே அளவில் இலவச அரிசி வழங்கப்படும்.
25 கிலோ இலவச அரிசி
ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு வழங்கப்படும், 20 கிலோ அரிசிக்கு பதில், 25 கிலோ இலவசம்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு
உறுப்பினருக்கும், தலா, ஐந்து கிலோ அரிசி, கூடுதலாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து,ரேஷன் கடைகளில், உணவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்து உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு நிர்ணயித்துள்ள அளவில், ஊழியர்கள், அரிசியை வழங்குகிறார்களா என்பதை கண்காணிக்க ஆய்வு செய்யப்படுகிறது. மொத்தமாக அரிசியை எடுத்து செல்ல முடியாதவர்கள், இரண்டு தவணைகளில் பெறலாம். இந்த சட்டத்தால், அரிசி மானியத்துக்காக, மாநில அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரசீது வழங்க கருவி :
ரேஷன் கடைகளில், உணவு பொருட்கள் வாங்கும் போது, காகித ரசீது வழங்கப்படுகிறது. இதில், முறைகேடுநடப்பதால், நவீன கருவியில், ரசீது போட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தற்போது, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரசீது போடும் போது, அந்த விபரம் கார்டுதாரருக்கு,
எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். நேற்று முதல், அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவி மூலம் ரசீது போடும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 34 ஆயிரத்து, 776 ரேஷன் கடைகள் உள்ளன; அதில், 70 சதவீத கடைகளில், அக்., 1 முதல், பாயின்ட் ஆப் சேல் கருவியில் ரசீது போடப்பட்டது. நேற்று முதல் அனைத்து கடைகளிலும், கருவி மூலம் தான் ரசீது போடப்படும். எனவே, ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் மொபைல் போன் எண்ணை, ரேஷன் கடைகளில் உடனே பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்