தனி நபர் வருமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க!
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்து மக்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இதுவரையிலான தனி நபர் வருமான வரி விதிப்பு என்பது ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 5 சதவீதமாக இருந்தது. ஆனால், மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த வருவாய் பிரிவை நீக்குவதாக அறிவித்தார்.
அதன்படி, இனிமேல் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே வருமான வரி வசூலிக்கப்படும். ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும்.
சலுகைகள்
ஆனால் இதிலும் சலுகைகள் உள்ளன. அதாவது, 5 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் மேலும் சில வரி விலக்குகளை பெற முடியும். இந்த வரி விலக்குகளை அவர்கள் முழுமையாக பெற்றால் ரூ.7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு அவர்கள் வரி கட்ட தேவையிருக்காது.
சேமிப்பு வரி விலக்கு
வருமான வரித்துறை சட்டப்பிரிவு 80சி-ன்கீழ், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும். இதில் பெண் குழந்தைகளுக்கான சுகன்ய சம்ரிதி/செல்வமகள் சேமிப்பு திட்டம், பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளிட்டவை வந்துவிடும்.
நிலையான கழிவு அதிகரிப்பு
இதுதவிர நிலையான கழிவு என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும். கடந்த வருடம்தான் நிலையான கழிவு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.40 ஆயிரம் என அறிவிக்கப்பட்ட நிலையான கழிவு தொகை இந்த ஆண்டு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்தால், 7 லட்சம் ரூபாய் வரை கணக்கு காட்டி விலக்கு பெற்றுவிடலாம். இதுதவிர 80 சிசி பிரிவின்கீழ் வரும் முதலீடுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு உள்ளதால், அதையும் சேர்த்தால் 9 லட்சம் வரையிலான வருவாய்க்கு கணக்கு காட்டிவிடமுடியும்.
பலனளிக்கும்
ஆனால் இதில் பெரும்பாலான மாதசம்பளதாரர்கள் 7.5 லட்சம் வரை எளிதாக கணக்கு காட்டிவிட முடியும். எஞ்சிய 2 லட்சத்திற்கு கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டி வரும். எப்படி இருந்தாலும், இது நடுத்தர வர்க்கத்து மாத சம்பளதாரர்களுக்கு பலனளிக்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.