அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாத இறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நாற்காலி, மேசை, பெஞ்ச், 'டெஸ்க்' போன்றவை உபரியாக இருந்தால், அவற்றை தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் தேவைப்படும் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வழங்குதல் வேண்டும்; இது தொடர்பாக இருப்புப் பதிவேட்டில் இரண்டு பள்ளிகளுமே பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான உத்தரவினை முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்கலாம்.
பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள மேசை-நாற்காலி, மாணவர்கள் அமரும் 'பெஞ்ச்- டெஸ்க்' உள்ளிட்ட பொருள்களை பழுது நீக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான செலவினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பள்ளி மானிய நிதியிலிருந்து (நஸ்ரீட்ர்ர்ப் எழ்ஹய்ற்) மேற்கொள்ளலாம்.
ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்: முற்றிலும் பழுது நீக்கம் செய்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அந்தப் பொருள்களை அரசு விதிகளின்படி குறைந்தபட்ச விற்பனை மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கு குறையாத வகையில் ஏல முறையில் விற்பனை செய்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.
இந்த நடைமுறையைப் பின்பற்றி பள்ளியில் வகுப்பறை, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்தப் பணியினை ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.