தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...
தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து "கணினி அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது .
. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.
கேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing), இணையம், தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப்பிரிவுகள், ரோபோடிக்ஸ் (Robotics), etc. போன்றவை இன்று அதி முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இன்றைய சூழலில், கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்தாலும், அங்கு கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக இடம்பெற்றுள்ளது; இதனால், பள்ளிகளில் கணினியின் அடிப்படை பாடப்பிரிவுகளை (Fundamentals of Computers) கற்காத மாணவர்கள் கல்லூரிகளில் கணினி சார்ந்த பாடங்களை பயிலும்போது, தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள் என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.
தகவல் தொழில்நுட்பமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் அவற்றை எவ்வாறு கையாள்வது, அவற்றிடமிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். இல்லையெனில் “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணையம் சார்ந்த கணினி விளையாட்டுகளுக்கு குழந்தைகளை பலிகொடுத்திருக்க மாட்டோம். இவ்வாறு, நவீன காலத்திற்கேற்ப கல்விமுறையையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தாமலேயே பல மாணவர்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதிர்ச்சியான உண்மை.
”தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை...”
தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்துமுடித்த பட்டதாரிகளை அரசு பள்ளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் 40,000 வேலையில்லா பட்டதாரிகளாக உருவாக்கியள்ளனர் நமது ஆட்சியாளர்கள். படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை நியமித்து சம்பளம் தருவதற்கு கணக்கு பார்க்கும் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் இலவச மடிக்கணினி தருகின்றது. அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவதற்கு சொல்லித்தர கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இன்றுவரையில், பள்ளிகளில் முறையான கணினி ஆய்வகங்களும் இல்லை. இது என்ன கொடுமை..?? தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை..??
பிரபலமான மற்றும் அரசியல் பலம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த எந்த பரிசோதனைகளும், ஆய்வுகளும் முழுமையாக அனுமதிக்கப்படாதது கல்வியின் பாரபட்சங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறது…
நவீனமும், விஞ்ஞானமும் Android, iOS போன்ற புதிய வரவுகளை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்கள் இன்னும் விண்டோஸ் XP, UPS மின்சார வசதியற்ற கணினிகள் மற்றும் “CRT” போன்ற பழமையான சாதனங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மேம்படுத்தப்படாத கல்விமுறையாலும், கண்டுகொள்ளப்படாத கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் கல்வியில் மேலும் பின்தங்குகிறது.
தமிழகத்தில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் மாண்புமிகு கல்வி அமைச்சர் பாடத்திலும், பாடத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது மட்டுமல்லாமல் கலைத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் “எங்கும் கணினி!! எதிலும் கணினி!!” என்ற வாசகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வரை இல்லை.
இந்நிலையை மாற்றி, தமிழக பள்ளிக் கல்வித்துறையை உலக தரத்திற்கு ஈடாக கொண்டு செல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” பாடத்தை கட்டாயப்பாடமாக கொண்டுவந்து அதற்கு தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுகிறோம்..!!
செல்வி ரங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.