அன்பாசிரியர்' தொடர் எதிரொலி: சிலம்பு, யோகா ஆடை, பரிசுப் பொருள் - அரசுப் பள்ளிக்கு உதவிய 'தி இந்து' வாசகர்கள்!
சிலம்பாட்ட பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகள்.
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்! தொடரில் தங்கள் பள்ளியில் நடைபெறும் சிறப்பு யோகா பயிற்சிகள் குறித்தும், ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்குவது குறித்தும் ஆசிரியர் பழனிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த 'தி இந்து' வாசகர்கள் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்முடன் பெரு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார் அன்பாசிரியர் பழனிக்குமார். ''லண்டனில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத 'தி இந்து' வாசகர், அனைத்து மாணவர்களின் யோகா ஆடைகளுக்கும் சேர்த்து ரூ.59,000 அளிப்பதாக வாக்களித்துள்ளார். முதற்கட்டமாக அவர் அளித்த 15,000 ரூபாயில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா ஆடை வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வாசகர் மகாராஜன், ரூ.1000 மதிப்பில் மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஸ்கெட்ச் அடங்கிய பெட்டிகளை அளித்துள்ளார். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாதாமாதம் இதுபோன்ற பெட்டியை அனுப்புவதாகவும் உறுதியளித்துள்ளார்.
'அன்பாசிரியர்' தொடரைப் படித்த 'விதை' அறக்கட்டளையினர், 6000 ரூபாய்க்கு நாவல் மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்புக் கூண்டுகளை அளித்தனர். எங்கள் மாணவர்கள் அவற்றை புன்னையாபுரம் முந்தல் சாலையில் நட்டுப் பாரமரித்து வருகின்றனர். இதைப்பார்த்து நெகிழ்ந்த அருகிலிருந்த கோயில் நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வேளை உணவை அளித்தனர்.
உயிர்த்தெழுந்த சிலம்பாட்டம்
கத்தாரில் வசிக்கும் 'தி இந்து' வாசகர் முகமது அக்பர், சிலம்பு போட்டிக்காக சிலம்புகள் வாங்க ரூ.2,500 அனுப்பினார். துபாயைச் சேர்ந்த சுரேஷ் சொக்கலிங்கம் மற்றும் ஓசுரைச் சேர்ந்த செந்தமிழன் இருவரும் தலா ரூ.3,000 அனுப்பினர். இதைக்கொண்டு சிலம்பு ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளோம்.
அத்தோடு, 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த கிருஷ்ணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சண்முகநாதன், மாலை 4.30 - 6 மணி வரை எங்கள் மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பு கற்றுத்தருகிறார்.
இதைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்புப் போட்டியில் மதன் முத்து மற்றும் பாலசுப்ரமணியன் இருவரும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்றனர். அவர்களுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த 'தி இந்து' வாசகர் அன்பு பிரணவ் கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.
அன்பு பிரணவ், ஆங்கிலத்தில் சிறந்துவிளங்கும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்திலும் இணைந்து ரூ.10,000 அனுப்பியுள்ளார். அதில் 6,000 ரூபாய்க்கு 3 தங்க நாணயங்கள் வாங்கிக்கொண்டு மீதி 4 ஆயிரத்துக்கு மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளும், வாய்ப்பாடுகளும் வாங்கினோம்.
மரக்கன்று நட்டவர்களின் அனுபவங்களைக் கட்டுரையாக எழுதச்சொல்லி அதில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு புத்தகப்பை, வண்ணத் தூரிகைகள், கைக்கடிகாரம் ஆகியவற்றையும் அன்பு பிரணவ் அமேசானில் ஆர்டர் செய்துவிட்டார்.
இதேபோல துபாயைச் சேர்ந்த முருகன் வேலு 2000 ரூபாயும், மதுரையைச் சேர்ந்த சியாமளா கிருஷ்ணமூர்த்தி 10,000 ரூபாயும் அனுப்பினர். புளியங்குடியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மாணவர்களுக்கு டிஃபன் பாக்ஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி ரூ.500 அளித்தார். துபாய் வாசகர் ரவி சொக்கலிங்கம் ரூ.5000 அனுப்பியுள்ளார். ராம் சுரேஷ் என்பவர் ரூ.10,000 அனுப்பியுள்ளார்.
ஆயக்குடியைச் சேர்ந்த வீரபாகு ரத்ததானக் கழகத்தினர் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்துவிட்டு ரூ.3000 மதிப்பில் வயர்லெஸ் மைக்கை அளித்தனர். அதே கழகத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மற்றும் முருகேசன் என்னும் இருவரும் ரூ.8000 செலவில், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வேளை உணவளித்தனர்.
இன்னும் ஏராளமானோர் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமாக இருந்த 'தி இந்து'வுக்கு என் நன்றிகளும், பாராட்டுகளும்'' என்கிறார் அன்பாசிரியர் பழனிக்குமார்.
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ஆசிரியர் பழனிக்குமாரின் தொடர்பு எண்:9976804887