தமிழக பாடத்திட்டம் சரியில்லை முன்னாள் முதல்வர் பன்னீர் ஆதங்கம்
'தமிழக பாடத்திட்டம், மத்திய அரசுக்கு இணையாக இல்லை' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி சேவை அளிக்கும், 'அம்மா கல்வியகம்' எனும் புதிய இணையதள துவக்க விழா, நேற்று நடந்தது. அதை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.விழாவில் பேசியதாவது:
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் செயலர், அஸ்பயர் சுவாமிநாதன்: இந்த இணையதளத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பு சேரவும், நுழைவுத் தேர்வு எழுதவும், இலவச பயிற்சி பெறலாம். திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன், வேலைவாய்ப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்: ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கு பயிற்சி பெற, 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது துவக்கப்பட்டுள்ள இணையதளத்தில், இலவசமாக பயிற்சி பெறலாம்.மேலும், ஐ.ஏ.எஸ்., தேர்வு, வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு போன்றவற்றுக்கும், இணையதளம் மூலம் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம்.முன்னாள் அமைச்சர் பொன்னையன்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தரமான பாடத்திட்டம் உள்ளது. ஆனால், மாநில அரசு பள்ளிகளில், நல்ல பாடத்திட்டம் இல்லை. தரமான பாடத்திட்டத்தை, அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெ., ஆட்சியில், மாநில வருவாயில், நான்கில் ஒரு பங்கு கல்விக்கு ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கு, 16 வகையான கல்வி உபகரணங்களை, இலவசமாக வழங்கினார்.ஐ.ஐ.டி., போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்கப்படுகிறது. இதனால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. தமிழக பாடத்திட்டம், மத்திய அரசு பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் இல்லை.இந்நிலையில், தற்போது துவக்கப்பட்டுள்ள, இலவச இணையதள சேவை, மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கிராமப்புற மாணவர்கள், நேரடியாக பயிற்சி பெறும் சூழலை, இந்த இணையதளம் ஏற்படுத்தி உள்ளது.'நீட்' தேர்வுக்கும், இந்த இணையதளம் மூலம் பயிற்சி பெறலாம். வேலைவாய்ப்பு பெறவும் கல்வியகம் உதவும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.இணையதள முகவரிஇலவச கல்வி சேவைக்காக துவக்கப்பட்டுள்ள, 'அம்மா' கல்வியகத்தின் இணையதள முகவரி, www.ammakalviyagam.in இந்த இணையதளத்தில், முதலில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு தனித்தனியே, பதிவு செய்ய வேண்டும்.பொதுக்கூட்டம்அனுமதி கிடைக்குமா? சேலத்தில், மார்ச், 15ல், பன்னீர்செல்வம் அணி சார்பில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, போலீசில் முறையாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், பொதுக்கூட்டம் நடத்த, அனுமதி கிடைக்குமா என கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.சேலம், முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், செல்வராஜ் உள்ளிட்டோர், சேலம், போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், பன்னீர்செல்வம் தலைமையிலான, அ.தி.மு.க.,வின் சார்பில், மார்ச் 8ல், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதே போல், பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க.,வின் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை, மார்ச், 15ல், சேலம் போஸ் மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இந்த மனு, உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆலோசனைக்கு பின், அனுமதி வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும் என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.'முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில், பன்னீர் அணியினர் பொதுக்கூட்டம் நடத்த, போலீஸ் அனுமதி கிடைப்பது சந்தேகம் தான்' என, பழனிசாமி அணியினர் கூறி வருகின்றனர்.இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், பன்னீர்செல்வம் அணிக்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாத, முதல்வர் பழனிசாமி அணியினர், எங்கள் அணி நிர்வாகிகளை பணம், பதவி ஆசை காட்டி, தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மார்ச், 15ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்க உள்ளோம். மேலும் பழனிசாமி அணியை சேர்ந்த பலர், எங்களுடன் இணைவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.