ஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இதற்காக பி.எட்., கணினி அறிவியல் பயின்றுள்ள ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கடந்த 2011-12 ஆம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.அப்போது, 6-10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.ஆனால், சில மாதங்களிலேயே திடீரென இப்பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது.அதேநேரத்தில், அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் கணினிஅறிவியல் பாடம் கட்டாயப் பாடமாக உள்ளது. தமிழகத்தில்800-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை.மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இவற்றுக்கு இணையானது என அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் மட்டும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிப்பது தவிர்க்கப்படுவது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வரும் காலகட்டத்தில், அதுகுறித்த கல்வி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினி அறிவியல் போன்ற அவசியமான பாடத்தை அரசுப் பள்ளிகளில் புறக்கணிப்பது தான் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் தான் பயில்கின்றனர். தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாணவர்களும் சிறந்து விளங்க கணினி கல்வி அவசியமாகும்.எனவே, அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.2006-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை. இதுபோன்ற பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டுவர வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் டி.அகிலன் கூறியதாவது:கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்தே கொண்டு வர வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருந்தும் ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படுகின்றன. மாணவர்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வரவேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, முன்னாள் கல்வி அமைச்சர்கள் கே.சி. வீரமணி, கே.பாண்டியராஜன் ஆகியோரிடமும், தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடமும் மனு அளித்துள்ளோம்.தமிழகத்தில் 1992-ஆம் ஆண்டு முதல் அங்கீகாரம் பெற்றபல்கலைக்கழகத்தில் பி.எட்., கணினி அறிவியல் படித்த பட்டதாரிகள் 39,019 பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களுக்கு ஆசிரியர்தகுதித் தேர்வில் பங்கேற்க தகுதியில்லை என்று கூறுகின்றனர். பி.எட்., கணினி அறிவியல் படித்தவர்களை தேர்வு செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் இதுவரை தேர்வு நடத்தவில்லை. இதேபோல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுகளில் பங்கேற்கவும் தகுதியில்லை எனக் கூறப்படுகிறது.சில அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் மட்டும் கணினி பாடப்பிரிவு உள்ளது. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே கணினி ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். அதிலும் கணினி அறிவியலில் பி.எட்., முடித்தவர்களை நியமிக்காமல், பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
எனவே, தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தவும், அதற்கான பணியிடங்களில் பி.எட்., கணினி அறிவியல் முடித்துள்ள ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறுவார்கள்.இதன்மூலம் தற்போதைய காலத்துக்கு ஏற்ப அவர்களுடைய கணினி அறிவும் மேம்படும் என்பது உறுதி.