படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கவனத்துக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்புதான் பிறந்த தேதி, பெயரை மாற்ற முடியும்+
சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்பு தான் அப்பணியை செய்ய முடியும். தேர்வு எழுதிய பிறகு மாற்றம் செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் கடந்த 1989ம் ஆண்டு பிறந்தேன். எனது பெற்றோர் அதை மறந்து நான் பிறந்தது 1992ம் ஆண்டு என்று மாற்றி கொடுத்து விட்டனர்.
பள்ளியில் எனது பெற்றோர் செய்த தவறினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகு எனது சான்றிதழை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனது கல்வி சான்றிதழில் எனது பிறந்த தேதியை மாற்றி கொடுக்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் மாற்றி தர மறுத்துவிட்டார்கள். எனவே எனது சான்றிதழில் பிறந்த தேதியை மாற்றி தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் நேற்று விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கூறியபடி, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு முன்பு தான் பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்ற முடியும். மனுதாரர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகு பிறந்த தேதியை மாற்ற கோரி உள்ளார்.
இதை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.