பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
உரை:இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.
பழமொழி :
Blessings are not valued till they are gone
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
பொன்மொழி:
நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்
-காந்திஜி
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?
இந்தியன் ரயில்வே
2.மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை
நீதிக்கதை
ராஜாவின் மனக்கவலை - ஜென் கதைகள்
(The Confused King - Zen Stories for Kids)
ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா.
அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.
அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.
ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’
‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’
‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’
‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.
அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.
இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான். குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’
அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.
அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.
இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.
‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’
இன்றைய செய்தி துளிகள்:
1.மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோ வெளியிடப்பட்டது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் லோகோவை வெளியிட்டார்.
2.தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் தங்கமணி பேட்டி
3.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
4.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? செப்டம்பர் 22-ல் முதல் ஆய்வுக்குழு கூட்டம்
5.ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஷிகர் தவான் சதம்