1. கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மூன்று முக்கிய கட்டிடங்கள். 1. சென்னையில் வள்ளுவர் கோட்டம். 2. பூம்புகாரில் சிலப்பதிகார கலைக் கூடம். 3. குமரிமுனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை. இவையெல்லாம் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு.
2. கருணாநிதி 1941ம் ஆண்டு ‘‘மாணவ நேசன்’’ என்ற கையெழுத்து பத்திரிகையை தொடங்கி நடத்தி வந்தார். 1942ம் ஆண்டு அதனை முரசொலி துண்டு பிரசுரமாக்கினார். பின்னர் வார இதழ், நாளிதழாக மாறியது. அதுதான் அவர் பெற்ற முதல் குழந்தை.
3. கருணாநிதி தனது 14வது வயதில் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். அதுவே பின்னாளில் அனைத்து மாணவர் கழகம் என்ற அமைப்பாக உருவாகியது. இந்த அமைப்புதான் திராவிடையக்கத்தின் முதல் மாணவர் அமைப்பாகும்.
4. நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரி சாமியின் பேச்சின் பால் ஈர்க்கப்பட்டு, 14 வயதில் அரசியலுக்கு வந்தார். அன்று ஆரம்பித்த அவரின் அரசியல் பயணம் இன்னமும் தொடர்கிறது.
5. கருணாநிதி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் 1957ம் ஆண்டு. குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் 2016 வரையில் போட்டியிட்ட எந்த தேர்தலில் தோற்றதே இல்லை. சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் மூன்று முறை போட்டியிட்டு ஜெயித்தார். 2016ம் ஆண்டு தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுத்தனர், சொந்த தொகுதியான திருவாரூர் மக்கள்.
6. ஒரு கட்சியின் தலைவராக 45 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பெருமை கருணாநிதிக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அவர் தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்ததும் மிகப் பெரிய சாதனையே.
7. 14 ஆண்டுகள் எதிர்கட்சி தலைவராக இருந்த போதிலும் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்கும் திறமையை அவர் பெற்றிருந்தார்.
8. ஆரம்பத்தில் அசைவ உணவை விரும்பி சாப்பிட்ட கருணாநிதி, பிற்காலத்தில் அசைவ உணவுக்கு மாறினர்.
9. கருணாநிதி 20வது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸில் திரைக்கதை எழுத்தாளராக பணியில் சேர்ந்தார். 39 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
10. இதுவரையில் 10 நாடகங்களை எழுதியுள்ளார். 13 இலக்கிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
11. நவீன தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலை தளத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மூத்த தலைவர் அவர்தான்.
12. கருணாநிதி கட்சி தலைவராக இருந்த போது 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். அதன் பின்னர் 1993ம் ஆண்டு வைகோ கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். வைகோ பின்னாளில் கருணாநிதியோடு தேர்தல் கூட்டணி வைத்தார். இரண்டு பிளவுகளை கட்சி சந்தித்த போதும், கட்சியை கட்டுக் கோப்பாக நடத்தி வந்தார்.
13. கருணாநிதியின் சகோதரியின் மகன் முரசொலி மாறன், திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். முதல் மனைவியின் மகன் மு.க.முத்துவை சினிமா நடிகராக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அவரது இரண்டாவது மனைவி தயாளுவின் மகன் மு.க.ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக அரசியலில் உருவாக்கினார். அவர் சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை முதல்வர் என பல்வேறு பதவிகளை வகித்து தற்போது, கட்சியின் பொருளாளராகவும், செயல்தலைவராகவும் உள்ளார். இன்னொரு மகன் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக இருந்தார். மூன்றாவது மனைவி தயாளுவின் மகள் கனிமொழி ராஜ்யசபா உறுப்பினராகவும், கட்சியின் மகளிரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மத்திய அமைச்சராக இருந்தார்.
14. கருணாநிதி மீது ஊழல் புகார் குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்ட போதிலும் , எதுவும் நிருபிக்கப்படவில்லை. சர்காரியா கமிஷன் அமைக்க்கப்பட்ட போதிலும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிருபிக்கப்படவில்லை.
15. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஏராளமான பாலங்கள் கட்டினார். அதில் திருநெல்வேலியில் அவர் கட்டிய இரடுக்கு மேம்பாலம் அவர் பெயரைச் எப்போதும் சொல்லும். சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மேம்பாலம் கட்டியதில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லி, இரவோடு இரவாக கருணாநிதி கைது செய்யப்பட்டார். ஆனால், கடைசி வரையில் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
16. கருணாநிதி குடியிருக்கும் கோபாலபுரம் வீட்டை தனது மறைவுக்குப் பின்னர் மருத்துவமனையாக்கி ஏழைகளுக்கு உதவ வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார்.
17. எழுத்தாளர்களை ஊக்கிவிக்கும் வகையில் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடியை வழங்கியுள்ளார். ஓவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியின் போது, கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.
18. 96ம் ஆண்டு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்த ஜி.கே. மூப்பனாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார், கருணாநிதி. 99ம் ஆண்டு யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்த போது, சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கருணாநிதியிடம், நீங்கள் பிரதமராவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் என் உயரம் எனக்குத் தெரியும் என பதிலளித்தார். இந்த பதிலே திமுக – தமாகா கூட்டணி உடைய காரணமாக அமைந்தது. அப்போது பிரதமர் பதவிக்கு ஜி.கே.மூப்பனார் முயற்சி செய்ததாகவும், கருணாநிதி ஆதரிக்கவில்லை என்றும் சொல்வார்கள்.
19. திமுக தலைவர் கருணாநிதிக்கு சீட்டாடுவது பிடித்தமான பொழுது போக்கு. ரயில் பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அவர் தனது நெருக்கமான நண்பர்களுடன் சீட்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
20. கருணாநிதி தீவிரமான கிரிக்கெட் ரசிகர். பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டால் கூட அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோரை அவருக்கு சொல்ல வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும் போது, டிவியில் முழு போட்டியையும் பார்த்து ரசிப்பதுண்டு. சச்சின், டோனியின் ஆட்டம் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
21. ஈழ தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களில் கருணாநிதி முக்கியமானவர். இலங்கை சென்ற அமைதிப்படையினர் தமிழர்கள் மீது பல்வேறு வன் செயல்களில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அதனால் அவர்கள் சென்னை திரும்பி வந்த போது வரவேற்க போகவில்லை. பின்னாளில் இவருடைய ஆட்சியை கலைக்க, அதுவே காரணமாக அமைந்தது.
22. அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடும் கருணாநிதி, அன்றைய நாளிதழ், பருவ இதழ்களை படித்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த இதழ்களில் தன்னைப் பற்றி செய்திகள் வந்தால், உடனடியாக சம்மந்தப்பட்ட பத்திரிகைக்கு போன் போட்டு பேசும் பழக்கத்தை வைத்திருந்தார்.
23. கருணாநிதி அதிகாலை நடைபயிற்சி எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். பெரும்பாலும் அவர் தனது நடைபயிற்சியை அறிவாலயத்திலேயே முடித்துக் கொள்வார். அப்போது அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் யாராவது இருப்பார்கள்.
24. வயது அதிகரித்த பின்னர் நடைபயிற்சியை செய்ய முடியாத சூழலில், யோகா செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
25. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று புத்தாடை உடுத்தி, குடும்பத்தினருடன் கொண்டாடுவார். இப்போதெல்லாம் தன்னை சந்திக்கும் குடும்பத்தினர், கட்சிக்காரர்களுக்கு ரூ.10 பரிசாக வழங்குவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.