நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டிருந்த நேரம். வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும்போதும், பள்ளிக்குப் பக்கத்திலும் சின்னச் சின்ன பசங்க கடைகளில் வேலை செய்யறதைப் பார்ப்பேன். சிலர் ரோட்டோரமா நின்னு கையேந்தி காசு வாங்கிட்டிருப்பாங்க.
படிக்கவேண்டிய வயசுல இவங்க வாழ்க்கை எதனால் இப்படி இருக்குனு தோணும். என் வீட்டுக்கே சில பசங்க வருவாங்க. அப்பாவும் அம்மாவும் அவங்களுக்கு ஏதாவது பொருளாக வாங்கிக்கொடுப்பாங்க. 'கொடுக்கும் இடத்தில் நாம் இருக்கும்போது, தேவைப்படுகிறவர்களுக்கு உதவணும். அந்த உதவி, சரியான முறையில் போய்ச்சேரணும்'னு சொல்வாங்க.
அந்த வார்த்தைகள்தான் 'படிக்கமுடியாத ஏழை மாணவர்களுக்கு ஏதாவது செய்யணும்' என்கிற எண்ணத்தை எனக்குள் உருவாக்குச்சு” - ஃபசூல் ரகுமானிடமிருந்து நிதானமான குரலில் தெளிவான வார்த்தைகள் வெளிப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன், ஃபசூல் ரகுமான். இரண்டு வருடங்களுக்கு முன்பு, பிரதமருக்குக் கடிதத்தின் மூலம் அனுப்பிய ஒரு திட்டம், இன்று நாடு முழுவதும் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 'அசிஸ்டென்ட் ஸ்கூல் பீப்பிள் லீடர் ஆஃப் இந்தியா'வாக தேர்வாகி இருக்கும் ஃபசூல், பத்மஸ்ரீ வழங்கும் சேவா விருதுக்கும் தேர்வாகி இருக்கிறார்.
“ஒன்பதாம் வகுப்பு முடிக்கப்போகும் சமயத்தில்தான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இலவச சேமிப்புத் திட்டம்' என்ற பெயரில் இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் உட்பட அரசுப் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவர்களிடம், மாதம் ஒரு ரூபாய் வசூலிக்க வேண்டும்.
அதன்மூலம் ஒரு வருடத்துக்கு 798 கோடி ரூபாய் கிடைக்கும். அந்தத் தொகையை ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தலாம்' என்று குறிப்பிட்டிருந்தேன். கடிதம் அனுப்பின சில நாள்களிலேயே, கடிதம் கிடைக்கப்பெற்றது எனப் பதில் வந்துச்சு.
அதற்குள் என் ஐடியாவை கேள்விப்பட்டு, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கூப்பிட்டுப் பாராட்டினார். முதல்வர் நாராயணசாமியும் நேரில் வாழ்த்து தெரிவித்தார். அந்தப் பாராட்டுகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்துச்சு. அப்போதுதான் பிரதமர் அலுவலகத்திலிருந்து மறுபடியும் ஒரு கடிதம் வந்துச்சு. 'மாண்புமிகு பிரதமர் அவர்கள் உங்களோடு பேச விரும்புகிறார். நேரில் வரவும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாங்க. போன வருஷம் அக்டோபர் 26-ம் தேதி, காலையில் 16 நிமிடங்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினேன்.

அவரைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நடந்த அத்தனை செக்யூரிட்டி சிஸ்டத்தையும் பார்த்ததுக்கே உடம்பு நடுங்கிப்போச்சு. ஆனால், பிரதமர் என்னைச் சந்தித்தபோது, ஒரு நண்பர்போல இயல்பாகப் பேசினார். 'உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் குடியரசுத் தலைவரையும் சந்திக்கலாமே'னு ஆங்கிலத்தில் சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
ஜனவரி 15-ம் தேதி, குடியரசுத் தலைவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைச்சது. அன்றைக்கு இஸ்ரேல் பிரதமரும் அங்கே வந்திருந்தார். அவரையும் பார்த்துப் பேசினேன். என்னுடைய இந்தத் திட்டத்தை சட்டமாகவே செயல்படுத்தலாம் என குடியரசுத் தலைவர் சொன்னார். நான் நினைச்சுகூட பார்க்கலை.
ஜனவரி 16-ம் தேதி சென்னைக்கு வந்துட்டேன். 19-ம் தேதியே, இந்தத் திட்டத்தை லோக் சபாவில் சட்டமாக செயல்படுத்துவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்துட்டாங்க” - பெருமிதப் புன்னகையோடு பேசும் ஃபசூல் முகத்தில், ஆயிரம் சூரியனின் ஒளி.
'' அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இறுதி நிகழ்ச்சியில் பேசும்போது, 'எனக்கு ஏழைக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே ஆசை. பள்ளிக்குச் செல்லமுடியாமல் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு நீங்கள் முன்வர வேண்டும். உங்களில் யாரேனும் அதை நிறைவேற்ற முடியுமா" என்றார்.
அதுதான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று இந்தியா முழுவதும் அவருடைய ஆசை நிறைவேறியிருக்கு. வரும் மே முதல் வாரம், சவுதி அரேபியாவுக்குப் போறேன். அங்க 13 லட்சம் மாணவர்களை அசம்பிள் பண்றாங்க. அவங்க முன்னாடி பேசப் போறேன். சவுதி மன்னரையும் சந்திக்கிறேன். மே 26-ம் தேதி, ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கல்வி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்கிறேன். அன்றே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்காங்க'' என்கிற ஃபசூல் குரலில் இரட்டை உற்சாகம்